
நன்றி கெட்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கவுதம் அதானி விமர்சித்தார் என்று ஒரு போலி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோதல் நன்றி கெட்டவர் என தொழிலதிபர் கவுதம் அதானி கடும் விமர்சனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கவுதம் அதானி விமர்சித்தது போன்று நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பார்க்க உண்மையான நியூஸ் கார்டு போல உள்ளது. இருப்பினும் பின்னணியில் அமெரிக்கக் கொடி, வெள்ளை மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் எல்லாம் இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்கின்றன. இருப்பினும் இதையும் உண்மை என்று நம்பி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மோடியை அதானி விமர்சித்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. எந்த ஒரு ஊடகமும் அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை. உண்மையில் அதானி சிறு விமர்சனம் செய்திருந்தால் கூட தேசிய ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் ஊடகங்கள் வரையிலும் பெரிய விவாதமே நடத்தியிருப்பார்கள். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
சில தினங்களுக்கு முன்பு உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதை வைத்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. அதை எடுத்து எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது புரிந்தது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தோம்.
அதில், “மோதல். நான் உதவியிருக்காவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார். ட்ரம்ப் நன்றி கெட்டவர் என தொழிலதிபர் எலான் மஸ்க் கடும் விமர்சனம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து டிரம்ப் தலைக்கு பதில் மோடியின் தலையையும் மஸ்க் தலைக்கு பதில் அதானி தலையையும் வைத்து போட்டோ எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவானது.
இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள இதை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை நம்மிடம் உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
நன்றி கெட்டவர் மோடி என்று கவுதம் அதானி விமர்சித்ததாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:நன்றி கெட்டவர் என்று மோடியை விமர்சித்தாரா கவுதம் அதானி?
Fact Check By: Chendur PandianResult: Altered
