ஐயர் கடையில் அசைவம் விற்பதாகப் பரவும் படத்தால் சர்ச்சை…

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

ஐயர் நடத்தும் டிஃபன் கடையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டிஃபன் கடை ஒன்றின் பெயர்ப் பலகை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ராம் ஐயர் டிபன் கடை. சைவம் மற்றும் அசைவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அவாளே மாறிட்டாள்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை டீ கடைகாரனின் பித்தலாட்டம் 2019 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஏப்ரல் 27ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிராமணர்கள் நடத்தும் உணவகத்தில் கூட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுப் படத்தை பகிர்ந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் படத்தைப் பகிர்ந்தது போல உள்ளதால் இந்த படத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

படத்தைச் சற்று பெரிதாக்கிப் பார்த்தாலே சைவம் மற்றும் அசைவம் என்பது தனியாக எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இது ஏதும் பிரபல உணவகமா என்று அறிய கூகுளில் கடையின் பெயரை டைப் செய்து தேடிப் பார்த்தோம். அப்போது மேற்கு மாம்பலத்தில் இந்த கடை இருப்பது தெரியவந்தது. ஆனால், அந்த கடையின் தொலைபேசி எண் எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூகுள் மேப்-ல் அந்த கடையின் உணவு பட்டியல் கிடைத்தது. அதில், அந்த கடையில் சைவ உணவுகள் மட்டும் விற்பனை செய்யப்படுவதைக் காண முடிந்தது.

Google Map

அதே நேரத்தில் கடை மற்றும் கடையின் பெயர்ப்பலகையைப் பலரும் புகைப்படம் எடுத்து கூகுள் மேப்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது நமக்குக் கிடைத்தது. அதில், “ராம் ஐயர் டிபன் கடை. முதல் மாடியில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் மாடியில் என்று குறிப்பிட்டிருந்ததை எடிட் செய்து சைவம் மற்றும் அசைவம் என்று சேர்த்திருப்பது தெரிந்தது. 

சைவ உணவுகள் மட்டும் விற்பனை செய்யப்படும் கடையில், அதுவும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெயரில் இயங்கும் கடையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்ய தொடங்கிவிட்டார்கள் என்று அவதூறான தகவலை பரப்பியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த புகைப்படம் தவறாக எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஐயர் ஹோட்டலில் அசைவ உணவு விற்பனை செய்ய தொடங்கிவிட்டார் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஐயர் கடையில் அசைவம் விற்பதாகப் பரவும் படத்தால் சர்ச்சை…

Fact Check By: Chendur Pandian 

Result: Altered