கழுகு ஒன்றின் 10 ஆண்டுக்கும் மேலான வாழ்க்கைப் பயணத்தில் சென்று வந்த பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உயிருடன் உள்ள மற்றும் இறந்து கிடக்கும் கழுகு ஒன்றின் மீது ஜிபிஎஸ் கருவி இருக்கும் புகைப்படம், ஆப்ரிக்கா முதல் மத்திய ஆசியா வரையில் சென்று வந்தது போன்ற வரைபடம் ஆகியவற்றை வைத்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பத்து வருடங்களுக்குமேல் ஒரு கழுகு பயணித்த பாதைகள்தான் இது. ரஷ்யாவில் இருந்து ஒரு கழுகிற்க்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தி பறக்கவிட்டிருக்கிறார்கள் அந்த கழுகும் பத்து வருடங்களுக்குமேல் பல நாடுகளை கடந்து பறந்து கடசியில் சவுதி அரேபியாவில் சென்று உயிரிலந்துல்லது . பல நாடுகளுக்க இந்த கழுகு சென்றிருந்தாலும் நீர் பரப்பை கடந்து செல்லவில்லை காலம் முலுவதும் நிலபரப்பிலேயே சென்றுல்லதே வியப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை அதிசயம் ஆனால் உண்மை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை ஏராளமானவர்கள் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

ரஷ்யாவைச் சார்ந்த கழுகு ஒன்றின் மீது ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டதாகவும், 10 ஆண்டுகளாக அந்த கழுகு சென்று வந்த பாதைகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் பகிர்ந்துள்ளனர். இதே போன்று 20 ஆண்டுகளாக கழுகு ஒன்று மேற்கொண்ட பயணத்தின் வரைபடம் என்று இதே பதிவை சிலர் பகிர்ந்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஜிபிஎஸ் இந்த அளவுக்கு ஆற்றல் பயன்படுத்தியிருக்க முடியுமா, 20 ஆண்டுகளாக ஒரே ஒரு கழுகை ஏன் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 20 ஆண்டுகளாக ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட கழுகு என்று குறிப்பிட்டு சில செய்திகள் வெளியாகி இருந்தன. எனவே, இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்று எண்ணம் ஏற்பட்டது. அதே நேரத்தில் இது போலியான செய்தி என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்று கிடைத்தது.

அதில், "சமூக ஊடகங்களில் பலரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட கழுகு சௌதி அரேபியாவில் உயிரிழந்தது என்று கழுகு ஒன்றின் ஆச்சரியப்படத்தக்கக் கதை என்று ஒரு சில புகைப்படங்கள் மற்றும் தகவலை பரப்பி வருகின்றனர். உண்மையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜிபிஎஸ், ஜிஎஸ்எம் போன்றவற்றை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும் இவ்வளவு சக்திமிக்க தொழில்நுட்பம் இல்லை. அகுய்லா நிபலென்சிஸ் எனப்படும் புல்வெளிக் கழுகு பற்றி 2018ம் ஆண்டு மேற்கு கஜகஸ்தானில் Dr.Katzner and Dr. Bragin குழுவினரால் ஆய்வு நடத்தப்பட்டது. சௌதி அரேபியாவில் இறந்ததாக கூறப்படும் கழுகு உள்ளிட்ட அனைத்து படங்களும் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட கழுகுகள்தான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை Elena Schneider என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2019 பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டிருந்தார். தன்னை அவர் சைபீரியச் சுற்றுச்சூழல் மையத்தின் பறவையியல் நிபுணர் என்று குறிப்பிட்டிருந்தார்.

நம்முடைய தேடலின் போது ஏஎஃப்பி நிறுவனம் வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக் கட்டுரையும் கிடைத்தது. அதிலும், நமக்குக் கிடைத்த Elena Schneider ஃபேஸ்புக் பதிவை ஆதாரமாக வைத்திருந்தனர். மேலும் Elena Schneider தன்னுடைய பதிவில் ஆய்வை நடத்தியவர் என்று குறிப்பிட்டிருந்த Katzner என்பவரை ஏஎஃப்பி நிறுவனம் தொடர்புகொண்டு பேசியதாக குறிப்பிட்டிருந்தனர். அப்போது அவர், "மத்திய ஆசியாவில் உள்ள இந்த கழுகுகளின் இடப்பெயர்வு வழிகள் தொடர்பாக தங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. கஜகஸ்தானிலிருந்து 20 புல்வெளி கழுகுகளுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு சுமார் 10 மாதம் அவற்றின் நடமாட்டத்தை ஆய்வு செய்தோம்.

படத்தில் உள்ள ஒவ்வொரு ஊதா நிறக் கோடும் ஒரு கழுகின் எட்டு முதல் 10 மாத பயணத்தின் அசைவாகும். சில கழுகுகள் அரேபியாவில் உயிரிழந்தன. சில கழுகுகள் ஆப்ரிக்காவில் இறந்தன. சில கழுகுகள் மட்டுமே மத்திய ஆசியாவுக்குத் திரும்பி வந்தன. சௌதி அரேபியாவில் விழுந்த கழுகு ஒன்றை அந்நாட்டைச் சார்ந்த ஒருவர் கண்டறிந்தார். அது பற்றி அவர் அரபு மொழியில் பதிவிட்டிருந்தார். அவருக்கு கழுகுகளின் இடப் பெயர்வு படத்தை நான் அனுப்பியிருந்தேன். 20 கழுகுகளின் பயணம் என்று குறிப்பிட்டு அவருக்கு செய்தி அனுப்பியிருந்தேன். அது தவறாக மொழி பெயர்க்கப்பட்டு ஒரு கழுகின் 20 ஆண்டு பயணம் என்று தவறாக பகிரப்பட்டு வந்துள்ளது" என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில், கழுகு ஒன்றின் 10 ஆண்டு பயண வரைபடம் என்று பகிரப்படும் பதிவு ஓரளவுக்கு உண்மையும் சிறிது தவறான தகவலும் கொண்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

புல்வெளிக் கழுகு ஒன்றின் 10 ஆண்டு பயண வரை படம் என்று பரவும் படம் மற்றும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கழுகு ஒன்றின் 10 ஆண்டு பயண வரைபடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False