
மாநாட்டுக்கு ரூ.500 கேட்டு மிரட்டிய திராவிடர் கழக நிர்வாகிகள் என்று தந்தி டிவி செய்தி வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்ட ட்வீடி வீடியோ ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திக மாநாட்டுக்கு கட்டாய நிதி வசூல்.. “ரூ.500 குடுத்தே ஆகனும்.. இல்லைனா…” – துணிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் கதறல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை Raja Panjabi Kesan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் மையக் கருத்து, நடக்கும் தேதி உள்ளிட்ட விவரங்களை அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் மாநாட்டுக்காக அக்கட்சி நிர்வாகிகள் கட்டாய வசூலில் ஈடுபட்டதாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
தவறான செய்தியை வெளியிட்டதால் வீடியோ பதிவைத் தந்தி டிவி நீக்கிவிட்டது. ஆனால், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த பதிவை தந்தி டிவி நீக்காமல் விட்டுவிட்டது. தந்தி டிவி வீடியோவை நீக்குவதற்கு முன்பு அதை ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்து தற்போது பலரும் அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தங்கள் கட்சியின் மாநிலத் தலைவரே எல்லாவற்றையும் ஓசியில் வாங்குகிறேன் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்ட நிலையில், திராவிடர் கழகத்தினரை ஓசி சோறு என்று நக்கல் செய்து பதிவிட்டுள்ளனர். கட்டாய வசூலில் ஈடுபட்டது திராவிடர் கழகமா, திராவிடர் விடுதலைக் கழகமாக என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
முதலில் இது தொடர்பாக வெளியான செய்தியைப் பார்த்தோம். பாலிமர் தொலைக்காட்சியில் இது தொடர்பான செய்தி மற்றும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில், “சேலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக் கடைக்குள் புகுந்த திராவிட விடுதலைக் கழகத்தினர் தங்கள் கட்சி மாநாட்டுக்குக் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என்று வற்புறுத்தினர். தன்னால் ரூ.100 தான் தர முடியும் என்று அந்த கடைக்காரர் கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. வசூலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடை உரிமையாளர் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினார். போலீசார் வந்து சமாதானம் செய்தனர். மேலும் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: polimernews.com I Archive
உண்மை நிலையை அறிய சேலம் டவுன் போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய காவலர், ‘’திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீதுதான் வழக்கு புகார் வந்துள்ளது. இன்ஸ்பெக்டர் விடுமுறையில் உள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்குச் சென்றுள்ளனர். இப்போது அவர்களைத் தொடர்புகொள்ள முடியாது,’’ என்றார். காவல் நிலைய அதிகாரியிடம் கட்டாயம் பேச வேண்டும் என்று கூறிய போது எஸ்பிசிஐடி பிரிவு அதிகாரி ஒருவரின் எண் நமக்கு அளிக்கப்பட்டது. அவரைத் தொடர்புகொள்ள முயன்ற போது, நம்முடைய அழைப்பை அவர் துண்டித்தார். அவர் தரப்பில் விளக்கம் அளித்தால் அதை வெளியிடத் தயாராக உள்ளோம்.
நம்முடைய ஆய்வில், தந்தி டிவி தவறான செய்தியை வெளியிட்டு அதை நீக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பொதுக் கூட்டம் நடத்த பணம் வசூலித்ததாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன.
காவல் நிலையத்தில் திராவிட விடுதலைக் கழகத்தினர் மீது புகார் வந்துள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மாநாட்டுக்குக் கட்டாய நிதி வசூல் செய்தவர்கள் திராவிடர் கழகத்தினர் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மாநாட்டுக்காக திராவிடர் விடுதலைக் கழகத்தினர் வசூலில் ஈடுபட்ட சம்பவத்தை திக-வினர் கட்டாய வசூலில் ஈடுபட்டனர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கட்டாய வசூலில் ஈடுபட்டவர்கள் திராவிடர் கழகமா அல்லது திராவிடர் விடுதலைக் கழகமா?- தந்தி டிவி செய்தியால் குழப்பம்!
Fact Check By: Chendur PandianResult: Partly False
