தமிழ்நாட்டுக்கு நீங்க ஒன்னுமே தரவில்லை என்று மோடிக்கு சிறுமி ஒருவர் பதாகை வடிவில் கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

சிறுமி ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "அன்புள்ள மோடி தாத்தா. என் பெயர் துவாரகா மதிவதனி. 2std படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல வெள்ளத்தால பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஸ்டாலின் தாத்தா 6000 ரூபாய் கொடுத்தாரு. நீங்க ஒன்னுமே தல. நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம் எங்களுக்கு நிவாரணம் குடுங்க" என்று எழுதப்பட்டிருந்தது.

புகைப்பட பதிவில் "ஸ்டாலின் தாத்தா 6,000 கொடுத்தாரு, நீங்க ஒன்னுமே தரல. மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி" என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டிருந்தது.

எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பதிவிடப்பட்டிருந்த இந்த பதிவை பலரும் ரீபோஸ்ட் செய்திருந்தனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் திருச்சியில் புதிய விமானநிலைய முனைய திறப்பு விழா நடந்தபோது சிறுமி ஒருவர் காவி உடையில் பதாகை ஒன்றை ஏந்தியது தொடர்பாக செய்தி வௌியாகி இருந்தது. அதில், "அரசுப் பள்ளிகளில் இந்தி படிக்க எதுவும் இல்லை. தான் இந்தி கத்துக்கனும். என்னுடைய அப்பாவிடம் சொல்லி இடம் அளிக்கச் சொல்கிறேன். அங்கு இந்தி பள்ளிக்கூடம் கட்டித் தாருங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த சிறுமியின் புகைப்படத்தை பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பினர். சிறுமியே இந்தி கேட்கிறார், அதனால் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என்று தி.மு.க தரப்பில் சமூக ஊடகங்களில் இந்த படத்தை எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர். இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம்.

சிறுமி இந்தி படிக்க விருப்பம் தெரிவித்தது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது செய்தி ஊடகங்களில் சிறுமி தன் தந்தையுடன் பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில், இந்தி கத்துக்கனும் என்று குறிப்பிட்டிருந்தது.

சிறுமியின் தந்தை அளித்த பேட்டியை புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. தினமலர் அந்த சிறுமியின் தந்தையின் பேட்டி விடியோவை வெளியிட்டிருந்தது. அதில், இந்தி படிக்க வேண்டும் என்று சிறுமியின் ஆசைக்காக இந்த கோரிக்கை விடுத்தோம்" என்று அவர் கூறுகிறார். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்பட பதிவு எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

நிவாரண நிதி கொடுங்க என்று மோடியிடம் சிறுமி கேட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered