
‘’கேஜிஎஃப் நடிகர் யாஷ், பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற பாரபட்சம் இன்றி இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: FB posts with same caption
உண்மை அறிவோம்:
கேஜிஎஃப் என்ற பெயரில் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட படம் மிகப்பெரும் ஹிட்டடித்தது. அதில், ராக்கி என்ற பெயருடன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த யாஷ் பெரும் புகழ் பெற்றார். இதையடுத்து, அதன் 2வது பாகம் தற்போது KGF Chapter 2 என்ற பெயரில், வெளியிடப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பு நிலவும் இந்த படத்தின் டீசர் சில நாள் முன்பு யூடியுப்பில் வெளியாகி, அதிக முறை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கேஜிஎஃப் ஹீரோ யாஷ், கடந்த 2018ம் ஆண்டில் கர்நாடகா தேர்தலில், பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்த ஒரு சங்கி என்றும், அவர் விரைவில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ல் இதேபோல, பாஜக ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது.
ஆனால், இது முழு உண்மையல்ல. ஆம். யாஷ் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரித்து சில இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார்.

அதேசமயம், 2019ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மற்றும் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் என பலரையும் பாரபட்சம் இன்றி ஆதரித்து, பிரசாரம் செய்திருக்கிறார். குறிப்பிட்ட கட்சி வேட்பாளர்கள் சமூக அக்கறையுடன் செயல்படுபவர்களாக இருந்ததால், அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரசாரம் செய்ததாக, யாஷ் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தும் உள்ளார்
இதுபற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

நட்பு முறையில், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் சேவை புரிவோராக இருக்கும்பட்சத்தில் அவர்களை ஆதரித்து, வெளிப்படையாக பிரசாரம் செய்ததாகவும், இதில், அரசியல் தவறு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘’யாஷ் எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. நட்பு முறையில், பாஜக, காங்கிரஸ் கூட்டணி மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களையும் ஆதரித்து, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற, மக்களவை தேர்தல்களில் பிரசாரம் செய்திருக்கிறார். மக்கள் சேவைக்கு தகுதியானவர் என்று நினைப்பவர்களுக்காக பிரசாரம் செய்ததாகவும் அவர் ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளார்,’’ என்று தெரியவருகிறது.
இதுபற்றி நமது மலையாளம் குழுவினர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கேஜிஎஃப் நடிகர் யாஷ் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தாரா?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
