ஜனவரி 1 அன்று ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

2024ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி ஜப்பானை தாக்கிய சுனாமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜப்பானில் சுனாமி தாக்கிய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஜப்பானில் 01.01.2024 ஏற்பட்ட சுனாமி அலையின் ஒரு காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

2024 ஜனவரி 1ம் தேதி ஜப்பானில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. இதை வைத்து பழைய வீடியோக்களை எல்லாம் புதிய வீடியோ போல சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை முன்னரே பார்த்த நினைவு இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வீடியோ யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்தது தெரிந்தது.

சிலர் சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்று இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். சிலர் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் அரிய வீடியோ என்று பதிவிட்டிருந்தனர். இதனால், இந்த வீடியோ ஜப்பானை சார்ந்ததா அல்லது சீனாவைச் சார்ந்ததா என்ற குழப்பம் ஏற்பட்டது. வீடியோவில் ஒரு கட்டிடத்தில் சீன அல்லது ஜப்பானிய எழுத்துக்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இதை கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் மொழி பெயர்த்துப் பார்த்தோம். அதில் Riken food Co., Ltd என்று வந்தது. 

இதை வைத்துத் தேடிய போது ஜப்பானில் அப்படி ஒரு நிறுவனம் இருப்பதும் அதுவும் ரயில் தண்டவாளத்துக்கு அருகே அது இருப்பதும் தெரிந்தது. மற்றபடி இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2019ம் ஆண்டிலிருந்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2024 ஜனவரி 1 அன்று ஜப்பானை தாக்கிய சுனாமியின் வீடியோ என்று பரவும் பதிவு உண்மையில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த வீடியோவை எடுத்து 2024 ஜனவரி 1ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் வீடியோ என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜனவரி 1 அன்று ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False

Leave a Reply