
பங்காரு அடிகளார் முன்பாக, அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் முன்னிலையில் தமிழக அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தின் மீது ஃபேக் என்று குறிப்பிட்டும், அமைச்சர் சோஃபாவில் அமர்ந்திருப்பது போல உள்ள படத்தின் மீது ஒரிஜினல் என்றும் குறிப்பிட்டு புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ்புக் பதிவை Karthick Dhandapani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த படத்தை நன்கு உற்றுப் பார்க்கும் போது அமைச்சர் சோஃபாவில் அமரவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் தரையில் அமர்ந்திருக்கும் போது அவரது வேட்டியின் கருப்பு சிவப்பு கரை தெரிகிறது. ஆனால் எடிட் செய்யப்பட்ட படத்தில் பாதி தூரத்துக்கு வேட்டியின் கரை தெரிகிறது. மீதி பாதி காணாமல் போய்விடுகிறது. மேலும் அமர்ந்திருக்கும் விதம் எடிட் செய்யப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
அமைச்சர் சோஃபா மீதுதான் அமர்ந்தார் என்று தி.மு.க-வினர் பலரும் எடிட் செய்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த படத்தின் மீது ராஜேஷ் பென்சில் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தேடினோம். அப்போது, அது ஊடகத் துறையில் பணியாற்றி வரும் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கம் என்று தெரிந்தது. மேலும், சோஃபாவில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை அவர்தான் எடிட் செய்து வெளியிட்டார் என்பதும் அவர் பக்கத்தைப் பார்த்தபோது தெரிந்தது. 10 நிமிடத்தில் எடிட் செய்து வெளியிட்டேன், இவ்வளவு வைரலாகப் பரவும் என்று தெரியாது என அவர் குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அமைச்சர் தரையில் அமர்ந்தது தொடர்பாக பலரும் விமர்சனம் செய்து வரும் சூழலில், கிண்டலுக்காக ஒருவர் எடிட் செய்து வெளியிட்ட படத்தை உண்மை என்று கருதி பலரும் பகிர்ந்து வருவது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் அமைச்சர் சோஃபாவில் அமர்ந்த படம் உண்மையில்லை, அவர் தரையில் அமர்ந்ததே உண்மை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
