இந்துக்களை திட்டிய நடிகர் விஜய் அப்பா! – நியூஸ்7 செய்தி உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

இந்துக்கள் துரோகிகள் என்பதை நிரூபித்துவிட்டார்கள் என்று விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

VIJAY 2.png

Facebook Link I Archived Link

2019ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியானதாக கூறப்படும் நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக ஊடகத்தில் பகிரப்படும் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வளர்த்த கிடா மாரில் பாய்ந்துவிட்டது! இந்துக்கள் துரோகிகள் என்பதை நிருபித்து விட்டார்கள்! விஜய் ரசிகர்கள் 60 பேர் பாஜகவில் இணைந்தது குறித்து SAC காட்டம்! இந்துக்கள் துரோகிகள்! என்று உள்ளது.

அந்த நியூஸ் கார்டுக்கு மேல், யேய் பாவாடையே! யாருக்கு யார் துரோகி? உன் மகன் ஜோசப் விஜய்யை கிறிஸ்த்துவன் என வெளியே தெரியாமலே தமிழ்நாட்டில் இந்துக்கள் இளைஞர்களை இவ்வளவு காலம் ஏமாற்றீய துரோகிடா நீ?? யார்டா *** துரோகி? என்று எழுதி சேர்த்துள்ளனர்.

இந்த பதிவை, ஆனந்தன் என்பவர் 2019 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக கொந்தளிப்பான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்பதற்கு பதில் கொச்சைத் தமிழில் வளர்த்த கிடா மாரில் பாய்ந்து விட்டது என்று எழுதியுள்ளனர். நிரூபித்து என்பது நிருபித்து என்று இருந்தது. பெரும்பான்மை மதத்தினதை துரோகிகள் என்று ஒன்றுக்கு இரண்டு முறை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.

VIJAY 3.png

இதை உறுதி செய்ய, நியூஸ் 7 தமிழில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பற்றி ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, இயக்குநர் சந்திரசேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்திய செய்தி கிடைத்தது.

VIJAY 4.png

அதை படித்துப் பார்த்தோம். திருப்பதியில் காணிக்கை செலுத்துவது தொடர்பாக சந்திரசேகர் பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த எச்.ராஜா, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதில், பெரும்பான்மை மதத்தினரை எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டியது தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை. இந்துக்களை எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி கூறியிருந்தால் எச்.ராஜா அமைதியாக இருந்திருப்பாரா என்ன? இதன் மூலம் இந்த தகவல் பொய்யானது என்று தெரிந்தது.

குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில், நடிகர் விஜயின் ரசிகர்கள் பா.ஜ.க-வில் இணைந்தார்களா, அது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தாரா என்று ஆய்வு செய்தோம். அப்போது மெர்சல் படம் வெளியான நேரம். நடிகர் விஜய்க்கு எதிராக பா.ஜ.க-வினர் பேசி வந்தனர். அப்போது விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து 60 பேர் விலகி எச்.ராஜா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தது தெரிந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் ஏற்கனவே பா.ஜ.க தொண்டர்கள் என்பது தெரியவந்துள்ளதாக ஒரு செய்தி கிடைத்தது. அந்த செய்தி நவம்பர் 28ம் தேதி வெளியாகி உள்ளது. அதாவது, எஸ்.ஏ.சந்திரசேகர் பற்றிய நியூஸ் கார்டு வெளியானதற்கு அடுத்த நாள்… அதில் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் மிகத் தவறான கருத்தைக் கூறினார் என்று கூறவில்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நியூஸ் கார்டின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை தேடிப்பிடித்து அதை இந்த நியூஸ் கார்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். வடிவமைப்பு ரீதியில் நியூஸ் 7 வெளியிட்ட நியூஸ் கார்டுக்கும் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிந்தது.

Archived Link

நியூஸ் 7 தமிழ் வாட்டர் மார்க் லோகோவோடுதான் எல்லா நியூஸ் கார்டுகளையும் வெளியிட்டு வருகிறது. ஆனால், இந்த நியூஸ் கார்டில் வாட்டர் மார்க் லோகோ இல்லை. ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு அனுப்பி அதன் நம்பத்தன்மை குறித்து கேட்டோம். அதற்கு அவர்கள் “இது நாங்கள் வெளியிட்டது இல்லை. எங்கள் தொலைக்காட்சியின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டது” என்றனர்.

விஜய் கிறிஸ்தவர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இத்தனை ஆண்டுகள் அவர் இந்து என்று கூறி ஏமாற்றியதை போல பதிவிட்டுள்ளனர். சிறிய வயதில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக பல படங்கள் இணையத்தில் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேபோல், இந்து முறைப்படி அவர் திருமணம் நடந்திருக்கும் படமும் இணையத்தில் உள்ளன. அவர் மதம் எது என்று ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

விஜய் மதம் தொடர்பாக அவருடைய தந்தை பல முறை பதில் அளித்திருக்கிறார். ”நான் கிறிஸ்தவன், என்னுடைய மனைவி இந்து. எங்கள் குழந்தை எந்த மதம்” என்று அவர் கேள்வி எழுப்பி வருகிறார். மேலும் “பள்ளியில் சேர்க்கும்போதே என்னுடைய மகனுக்கு மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டுள்ளேன்” என்று சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். 

Archived Link

எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லாத ஒரு வார்த்தையை பயன்படுத்தி நியூஸ் கார்டு ஒன்றை போலியாக தயாரித்து தங்கள் மதத்தினர் மத்தியில் பகிர்ந்துகொள்வது என்ன மாதிரியான சிந்தனையோ என்ற எண்ணம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை! 

நம்முடைய ஆய்வில்,

2017ம் ஆண்டு நியூஸ் 7 தொலைக்காட்சி குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்று கூறியுள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர் தவறாக பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதிசெய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்துக்களை திட்டிய நடிகர் விஜய் அப்பா! – நியூஸ்7 செய்தி உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False