FACT CHECK: மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

மாமிசம் சாப்பிடுபவர்கள் வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்குத் தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எச்.ராஜா படத்துடன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நவம்பர் 17, 2020 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டு என்று ஒன்றை ஷேர் செய்துள்ளனர். அதில், “விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு! மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை Rajesh Pasupathy என்பவர் 2020 நவம்பர் 18ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதே நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முன்னணி செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர் கதையாகவே உள்ளது. அந்த வகையில் தி.மு.க பற்றி தவறான தகவலைப் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களும், பா.ஜ.க பற்றி தி.மு.க ஆதரவாளர்களும் மாறி மாறி எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டை ஷேர் செய்து கொண்டே வருகின்றனர்.

இந்துக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக போலியான நியூஸ் கார்டு பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. அதற்கு பதிலடியாக தற்போது அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பா.ஜ.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எச்.ராஜா உள்ளிட்டவர்கள் கூறியதாக போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் கூட தீபாவளி அன்று மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்களே இல்லை என்று எச்.ராஜா கூறியதாக போலியான தகவல் பரப்பப்பட்டது. எச்.ராஜா அப்படி பேசவில்லை என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் ஆய்வுக் கட்டுரை வெளியானது. தற்போது அசைவம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை என்று எச்.ராஜா வேல் யாத்திரையின் போது பேசியதாக பகிரப்பட்டு வருகிறது.

இதைப் பார்க்கும் போது அசல் நியூஸ் கார்டு போலத் தெரிகிறது.தமிழ் ஃபாண்ட் கிட்டத்தட்ட நியூஸ் 7 தமிழ் பயன்படுத்துவது போலவே உள்ளது. இருப்பினும் பின்னணி டிசைன் இல்லை. நன்கு உற்றுப் பார்த்த போது “மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை” என்ற பகுதி மட்டும் தனியாக சேர்க்கப்பட்டதைக் காண முடிகிறது. 

உண்மையில் நியூஸ் 7 வெளியிட்ட நியூஸ் கார்டை தேடினோம். நியூஸ் கார்டில் நவம்பர் 17, 2020 அன்று இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டது என்று உள்ளதால் குறிப்பிட்ட தேதியில் வெளியான நியூஸ் கார்டுகளைப் பார்த்தோம்.

முதலில் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளைப் பார்த்தபோது அதில் அப்படி எதுவும் இல்லை. ட்விட்டர் பக்கத்தில் தேடியபோது 2020 நவம்பர் 17ம் தேதி இரவு 8.47க்கு எச்.ராஜா தொடர்பான நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Twitter Link I Archive

அதில், “விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு! “கணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும் தைரியசாலிகள்; ஆன்மிகத்தை கடைப்பிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள்!” என்று கூறியதாக இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது.

விழுப்புரம் கூட்டத்தில் எச்.ராஜா பேசியது தொடர்பான செய்தியைப் பார்த்தோம். அதில், அசைவ உணவு சாப்பிடுவது பற்றி எச்.ராஜா எதையும் பேசவில்லை. தமிழக பா.ஜ.க ஊடக நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். எச்.ராஜா அப்படிப் பேசவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

இதன் அடிப்படையில், நியூஸ் 7 தமிழ் செய்தி ஊடகம் பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அசைவம் சாப்பிடுபவர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply