
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கிருந்தவர்களிடம் கை அசைத்த போது, பெண் ஒருவர் ஆபாச சைகை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடி தன்னை காண கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தம்ஸ் அப் சைகை காட்ட. எதிரில் இருந்த பெண் ஒருவர் ஆபாச சைகை காண்பித்தது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமேரிக்கா அமோக வரவேற்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Anne Ephrem என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அமெரிக்காவே அதிரும் வகையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் மோடிக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். தம்ஸ் அப் சைகை காட்டி மோடிக்கு, பெண் ஒருவர் ஆபாச சைகை காட்டியதாகப் படம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்த நினைவு இருந்தது. கொரோனா தடுப்பூசி அறிமுகம் அல்லது அது தொடர்பான நிகழ்ச்சியின் போது இந்த படம் பகிரப்பட்ட நினைவு இருந்ததால் இது பற்றி ஆய்வு செய்தோம். முதலில் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிகழ்வில் மோடி பங்கேற்ற போது இந்த புகைப்படம் வெளியாகி இருப்பது தெரிந்தது.
இந்த புகைப்படத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. பல ஊடகங்களும் இந்த புகைப்படத்தை தங்கள் செய்திகளில் பயன்படுத்தியிருந்தன. பிரதமர் மோடியின் யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோவின் முகப்பு படமாகவும் இந்த புகைப்படம் இருந்தது. இவை எல்லாம் இந்த புகைப்படம் 2023 ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.
அடுத்ததாக அந்த பெண் ஆபாச சைகை செய்தாரா என்று அறிய படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தோம். அதில், அந்த பெண்மணி கண்ணாடியில் கை வைத்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆபாச சைகை செய்தது போன்று எடிட் செய்து பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.

2021ம் ஆண்டு 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்ற புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து, தவறான தகவல் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
முடிவு:
அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு ஆபாச சைகை மூலம் எதிர்ப்பு தெரிவித்த பெண் என்று பரவம் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு ஆபாச சைகை மூலம் எதிர்ப்பு தெரிவித்த பெண் என்று பரவும் படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
