இந்தி, சமஸ்கிருத விவகாரம்: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி கிடைக்காது என்று அமித்ஷா மிரட்டினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

இந்தி, சமஸ்கிருதத்துக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகைப்படத்துடன் கூடிய ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது பாகிஸ்தானில் அல்ல என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மத்திய அரசு நிதி கிடைக்காது – அமித்ஷா என்று இருந்தது.

நிலைத் தகவலில் “எதே மத்திய அரசு நிதியா? தமிழ்நாடு வரி கட்டலைனா மயிருல நிதி வரும் மத்திய அரசுக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை திமுக கம்பம் உசேன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு உள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்க் கருத்தைத் தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாகத் தேசிய கட்சிகள் தொடர்ந்து கருத்தைக் கூறி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிர்க் கருத்தைக் கூறிய தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்தது போலவும், தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டியதாகவும் சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

மே 2, 2022 அன்று இந்த நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மே 2ம் தேதியோ அதற்குப் பிறகோ அமித்ஷா அவ்வாறு கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. தமிழ்நாட்டுக்கான நிதி கிடைக்காது என்று அமித்ஷா கூறியிருந்தால் அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும். தி.மு.க – பா.ஜ.க-வுக்கு இடையே மிகப்பெரிய அறிக்கை போரே நடந்திருக்கும். ஆனால், அமித்ஷா இப்படிக் கூறியதாகத் துண்டு செய்தி கூட நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, உண்மையில் இந்த நியூஸ் கார்டை ஜெயா பிளஸ் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம். நியூஸ் கார்டில் தகவல் உள்ள பகுதி மட்டும் தனியாகச் சேர்க்கப்பட்டது போல இருந்தது. எனவே, மே 2, 2022 அன்று ஜெயா பிளஸ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். 

ஜெயா பிளஸ்ஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடிய போது, அமித்ஷா புகைப்படத்துடன் கூடிய இதே போன்ற நியூஸ் கார்டை ஜெயா பிளஸ் வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அதில், “நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை. மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் ஆலோசிக்கிறார்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டும் மே 2, 2022 அன்று பிற்பகல் 12.31க்கு வெளியாகி இருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள ஜெயா பிளஸ் செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்திக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மத்திய அரசு நிதி கிடைக்காது என்று அமித்ஷா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தி, சமஸ்கிருத விவகாரம்: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி கிடைக்காது என்று அமித்ஷா மிரட்டினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply