டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட போராளி அமுல்யா லியோனா பங்கேற்றதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

2020 பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடந்த அசாதீன் ஓவைசி நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வாழ்க என்று அமுல்யா லியோனா கோஷம் எழுப்பிய புகைப்படம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதி ஆகியோர் புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், "கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ”அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் சிஏஏவிற்கு எதிரான பொதுக்கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.பி அசாதுதீன் ஓவைசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அமுல்யா என்ற பெண் மேடையில் பாகிஸ்தான் ‌ஜிந்தாபாத் என முழங்கினாள்,,, அவளும் டெல்லி விவசாய சங்க போராட்டத்தில்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Nandha Kumar என்பவர் 2021 ஜனவரி 26 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நெடுவாசல் மீத்தேன் திட்ட எதிர்ப்பு சமூக போராளி வளர்மதி டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற படத்தைத் தவறாக, பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பிய அமுல்யா லியோனா என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. இந்த தகவலைப் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மாநாட்டில் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாசுதீன் ஓவைசி முன்னிலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பி சர்ச்சையில் சிக்கியவர் அமுல்யா லியோனா. அதைத் தொடர்ந்து இந்தியா ஜிந்தாபாத் என்றும் அவர் முழங்கினார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அறியாமல் அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டுப் பதிவானது. 'எந்த நாடாக இருந்தாலும், அனைத்து நாடுகளும் வளமாக இருக்கட்டும்! இந்தியா வாழ்க! பாகிஸ்தான் வாழ்க! வங்கதேசம் வாழ்க! ஸ்ரீலங்கா வாழ்க! நேபாளம் வாழ்க! ஆப்கானிஸ்தான் வாழ்க! சீனா வாழ்க! பூட்டான் வாழ்க!' என்று அவர் ஃபேஸ்புக்கில் முன்னர் பதிவிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அவர் செய்தது சரியா தவறா என்ற வழக்குக்குள் நாம் செல்லவில்லை.

அமுல்யா லியோனா விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றார் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த படத்தில் இருப்பது அமுல்யா இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

வளர்மதி தேசிய அளவில் பிரபலமானவர் இல்லை என்பதால் அவருடைய படத்தை எடுத்து ஊடகங்கள் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் சமூக ஊடக பக்கங்களில் ஏதும் பதிவிட்டுள்ளாரா என்று அறிய முதலில் வளர்மதியின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம்.

அப்போது, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜனவரி 25, 2021 அன்று வெளியிட்டிருந்த புகைப்பட பதிவை வளர்மதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

அதில், "தமிழகத்தில் இருந்து தில்லி விவசாயிகளது போராட்ட களத்திற்கு சென்றுள்ள பிரதிநிதிகள். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் (SUMS), பெணகள் எழுச்சி இயக்கம் (WUM), ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் (AIM), ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPDR) ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் சென்றுள்ளனர். தியாகி பகத்சிங்கின் மருமகன் பேராசியர் ஜங்மோகன் சிங்குடன் தோழர்கள் டிக்கிரி எல்லையில்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொடர்ந்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற வீடியோவை வளர்மதி வெளியிட்டிருந்தார். அதில் வளர்மதி தமிழில் கோஷம் எழுப்புவதை கேட்க முடிகிறது. மேலும், பதிவுக்கு கமெண்ட் பகுதியில் ஒருவர் “டெல்லியில்தான் உள்ளீர்களா” என்று கேள்வி எழுப்ப. அதற்கு வளர்மதி, தற்போது டெல்லியால்தான் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் வளர்மதியின் படத்தைத் தவறாக அமுல்யா லியோனா என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற அமுல்யா லியோனா என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமுல்யா என்று பகிரப்படும் நபர் தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதி என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண் அமுல்யா லியோனா இல்லை!

Fact Check By: Chendur Pandian

Result: False