ம.பி-யில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீசிய பெண்கள் கைது என்று பரவும் பழைய வீடியோ!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி ஊர்வலத்தின் மீது கல்வீசிய பெண்களை போலீசார் கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “ராம நவமி நிகழ்ச்சியில் ஹிந்துக்கள் மீது கல் எறிந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்…இடம்…மத்திய பிரதேசம்…கார்கோன்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை வேத நாயகம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 17ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராம நவமி கொண்டாட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக மாறியது. ராம நவமி ஊர்வலத்தில் கல்வீசிய பெண்கள் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையில் 2022 ராம நவமியின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2020ம் ஆண்டு செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்தது தெரிந்தது. என்.டி.டி.வி வெளியிட்டிருந்த வீடியோவுடன் கூடிய செய்தியில், உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கொரோனா காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை முகாம் மற்றும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வந்த மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது அப்பகுதி மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். வாகனங்கள் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்தனர்” என்று இருந்தது.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா அச்சம் உச்சத்திலிருந்த போது இந்த சம்பவம் நடந்திருப்பது தெளிவாகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2020ம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை 2022ம் ஆண்டு ராம நவமி வன்முறையோடு தொடர்புப்படுத்திப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில், மத்தியப் பிரதேசத்தில் ராம நவமியின் போது தாக்குதல் நடத்திய இஸ்லாமியப் பெண்கள் கைது என்று பகிரப்படும் தகவல் தவறானது, விஷமத்தனம் மிக்கது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத்திய பிரதேசத்தில் ராம நவமி ஊர்லவத்தில் கல்வீசிய இஸ்லாமிய பெண்கள் கைது என்று பரவும் வீடியோ 2020ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் வேறு ஒரு சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ம.பி-யில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீசிய பெண்கள் கைது என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False