தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் விரைவில் பாதியாகக் குறைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஆன்லைன் மீடியா ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "திமுக அமைச்சர், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் விரைவில் பாதியாக குறைக்கப்டும் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி" என்று இருந்தது. பாரதம் காப்போம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 20ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதியாகக் குறைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக எந்த ஒரு செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை. அதே நேரத்தில் இதை ஏராளமானவர்கள் ஷேர் செய்து வருவதை காண முடிகிறது. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டில் எப்போது வெளியானது என்று தேதி குறிப்பிடவில்லை. உண்மையில் இப்படி ஒரு நியூஸ் கார்டு வெளியானதா என்று தேடினோம். Gandeebam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 மே 22ம் தேதி இந்த நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. அந்த பதிவில் தி.மு.க எதிர்ப்பு என்பதே பிரதானமாக இருப்பதை அது பயன்படுத்திய டேக்-ல் இருந்து காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

2021 மே மாதத்தில் தி.மு.க தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றார். பதவியேற்ற புதிதில் இப்படி ஏதும் அறிவிப்பை வெளியிட்டாரா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம்.

கூகுளில் தேடியபோது, "ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு: தமிழக அரசு விரைவில் முடிவு!" என்று செய்திகள் வெளியாகி இருப்பது தெரிந்தது. அந்த செய்தியைப் பார்த்த போது திருச்சி சத்திரம் பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, "ஆசிரியர்களுக்கு சம்பளத்தைப் பாதியாக குறைத்து, கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல்கள் வருகின்றன. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய முடிவெடுக்கப்படும்" என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குறைக்கப்படும் என்று அவர் கூறவில்லை, இது பற்றி பல அறிவுறுத்தல்கள் வருகின்றன என்று மட்டுமே கூறியிருந்தார் என செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். "ஆசிரியர்கள் ஊதியம் பாதியாக குறைப்பா?பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்" என்று 2021 மே 20ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. அதைப் பார்த்தோம். அந்த வீடியோவில் 8.46வது நிமிடத்தில் ஆசிரியர் சம்பளம் தொடர்பாக நிருபர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.

அசல் பதிவைக் காண: YouTube

"ஆசிரியர்கள் ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கின்றனர். அவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து, முன்களப் பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு அப்படி ஏதும் ஐடியா இருக்கிறதா" என்று நிருபர் கேட்கிறார்.

அதற்கு அமைச்சர், "இல்லை, எனக்கும் இது போன்று நிறைய பதிவுகள் வாட்ஸ்அப்-ல் வந்தன. முதலமைச்சருடன் ஆலோசித்து அவர், அவர் என்ன அறிவிக்கச் சொல்கிறாரோ, அதன்படி அறிவிக்கப்படும்" என்று சொன்னார். மற்றபடி ஆசிரியர் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிடவில்லை.

ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்று அமைச்சர் கூறவில்லை. எனக்கும் இது போன்ற பதிவுகள் வாட்ஸ்அப்பில் வந்தன, இது பற்றி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று மட்டுமே கூறியுள்ளார். அதற்குள்ளாக, ஆசிரியர் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது போன்று தவறான தகவலைப் பலரும் பரப்பி வருவது உறுதியாகிறது.

அதே நேரத்தில் நம்முடைய தேடலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருகிற ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த செய்தி கிடைத்தது.

நம்முடைய ஆய்வில்…

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு 2021 மே மாதம் 22ம் தேதி வெளியாகி உள்ளது.

2021 மே 20ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்த கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த வீடியோ கிடைத்துள்ளது.

அப்போது, நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இல்லை, கொரோனா காலத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது, இது பற்றி முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று மட்டுமே அமைச்சர் கூறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அரசு ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பா?- அமைச்சர் பேட்டியை தவறாக பரப்பியதால் சர்ச்சை!

Fact Check By: Chendur Pandian

Result: False