நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் படத்தை செருப்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மோடிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டம்!

போராட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தைத் தீயில் எரித்ததால் பரபரப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக-வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இந்தியா கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு வர வேண்டும் என்று அந்த கூட்டணிக் கட்சியினர் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் திடீரென்று நரேந்திர மோடிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தது போலவும் அதனால் மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது போலவும் சிலர் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி எப்போது உறுதியானது என்று முதலில் ஆதாரங்களைத் தேடினோம். மார்ச் 2024லேயே பாஜக-வுடனான கூட்டணி இறுதியானது என்று செய்திகள் நமக்குக் கிடைத்தன. 2024 மார்ச் 10ம் தேதி வெளியான செய்திகளில், தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணியை பாஜக உறுதி செய்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இணைந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுக்குப் பிறகு என்டிஏ கூட்டணியில் இருப்பதாக சந்திரபாபு நாயுடு உறுதி செய்தார்.

உண்மைப் பதிவைக் காண: greatandhra.com I Archive 1 I anmnewsenglish.in I Archive 2

மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அது மார்ச் மாதத்திலேயே நடந்திருக்க வேண்டும். எனவே, இந்த வீடியோ அப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். இந்த வீடியோ காட்சி புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை மார்ச் 29ம் தேதி தெலுங்கு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில், தெலுங்கு தேசம் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் சீட் கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் கட்சியின் கொடியை எரித்து, ஃபிளஸ்க்ஸ், கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சந்திரபாபு நாயுடுவின் ஃபிளக்ஸ் படத்தை செருப்பால் அடித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஆந்திராவில் தேர்தலுக்கு முன்பாக இந்த வீடியோவை சிலர் சமூக ஊடக பக்கங்களிலும் பதிவிட்டிருந்தனர். இவை எல்லாம் இந்த புகைப்படம் 2024 ஜூன் மாதம் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

Archive

நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஜூன் 4, 2024 அன்று வெளியானது. ஜூன் 5ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்தார். பாஜக-வுடன் இணைந்து தேர்தலை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூட்டணியை விட்டு விலகுவதாக கூறவில்லை. அப்படி இருக்கும் போது மீண்டும் அவர் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்த நிலையில் அவருக்கு எதிராக மக்கள் கொந்தளித்தார்கள் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மார்ச் முதல் வாரத்தில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி உறுதியானது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ மார்ச் இறுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சீட் கிடைக்காத கோபத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்தார் என்பதால் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திராவில் மக்கள் போராட்டம் நடத்தினர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடிக்கு ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் எதிர்ப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False