FACT CHECK: சீமான் பற்றி எச்.ராஜா கேட்டதில் தவறில்லை என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social Media தமிழ்நாடு | Tamilnadu

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் பற்றி எச்.ராஜா கேட்டதில் தவறு இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹெச் ராஜா கேட்டதில் தவறில்லை. ஹெச் ராஜா அவர்கள் கேட்டதில் தவறில்லை ஆனால் இன்னும் சரியாக சீமானின் தகப்பனார் தமிழரா என்று கேட்டிருக்க வேண்டும்; அவரது தாத்தா பெயர் யாக்கோபு தானே? மறுக்க முடியுமா? – அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்” என்று இருந்தது.

இந்த பதிவை திராவிட அழகன் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சீமானின் தாயார் தமிழரா என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து எச்.ராஜா, சீமான் இடையே காரசார விவாதம் நடந்தது. எச்.ராஜாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து கூறியது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

அந்த நியூஸ் கார்டின் ஃபாண்ட் வழக்கமாக சன் நியூஸ் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், பின்னணி வாட்டர் மார்ச் சூரியன் லோகோ அழிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாக காண முடிகிறது. சன் நியூஸ் லோகோவுக்கு மேல் அண்ணாமலை படம் உள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

இதை ஆதாரப்பூர்வமா உறுதி செய்ய 2021 செப்டம்பர் 28ம் தேதி வெளியான சன் நியூஸின் புகைப்பட பதிவுகளை எல்லாம் பார்த்தோம். அதில், சீமான், அண்ணாமலை தொடர்பான நியூஸ் கார்டு எதுவும் இல்லை. இதை மேலும் உறுதிபடுத்த, சன் நியூஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தார்.

சீமான் பற்றி அண்ணாமலை இப்படி ஏதும் கருத்து வெளியிட்டாரா என்று பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எச்.ராஜா ஊடகவியலாளர்கள் பற்றிப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மட்டுமே எச்.ராஜா அற்புதமான மனிதர் என்று விளக்கம் அளித்திருந்தார் அண்ணாமலை. மற்றபடி சீமான் தொடர்பாக பிரச்னை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஊடகத் தொடர்பு பிரிவு நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் அண்ணாமலை அவ்வாறு பேசவில்லை என்றனர். இதன் மூலம் சீமான் பற்றி எச்.ராஜா கேட்டதில் தவறு எதுவும் இல்லை என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சீமான் பெற்றோர் பற்றி எச்.ராஜா கேட்டது சரியானதுதான் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீமான் பற்றி எச்.ராஜா கேட்டதில் தவறில்லை என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False