குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்குபாலம் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி கூறினார் என்று ஒரு விஷம பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் தமிழாக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், "குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்" என்று இருந்தது. அதற்கு கீழ், "Rate this translation" என்று இருந்தது.

இந்த பதிவை Devi Kamal என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 1ம் தேதி பதிவிட்டுள்ளார்.

U2 Brutus (@U2Brutus_off) என்ற ட்விட்டர் பக்கமும் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளது. நிலைத் தகவலில், "யோவ் @annamalai_k என்னய்யா மெண்டல் மாதிரி (மாதிரி மாதிரி) பேசுற? அட கருமம் புடிச்சவய்ங்களா...

Archive

இறந்த குடும்பத்தாருக்கு நன்றியாம்... அதுவும் மனமார்ந்த நன்றியாம். உள்ள இருந்தது வெளில வந்துருச்சுல்ல... இந்த லட்சணத்துலதான் இவிங்க தமிழ வளக்குறாய்ங்களாம்..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பலரும் இதை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

குஜராத் பால விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி கூறினார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். கீழே ரேட் திஸ் டிரான்ஸ்லேஷன் என்று இருப்பதன் மூலம் இது அண்ணாமலை வெளியிட்ட பதிவு இல்லை, அவருடைய ஆங்கிலப் பதிவின் தவறான மொழிமாற்றம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த அடிப்படை யதார்த்தம் தெரியும். அப்படி தெரிந்தும் மொழிபெயர்ப்பை வைத்துப் பதிவிட்டிருக்கிறார்கள் என்றால் தவறான தகவலை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டிருப்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இதை உறுதி செய்துகொள்ள, அண்ணாமலை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வெளியிட்ட ஆங்கிலப் பதிவை முதலில் எடுத்தோம். "My heart goes out to the people who have lost their lives and to their families in the bridge collapse in Morbi, Gujarat. We pray for the Sadagati of the departed souls and thank our SDRF & NDRF teams for their hardwork in saving the lives of many! Om Shanti!" என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஃபேஸ்புக் அளித்த தமிழாக்கத்தையும் பார்த்தோம். அதில் தவறாக மனமார்ந்த நன்றி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஓம் ஷாந்தி என்பதற்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மொழியாக்கத்தில் ஏற்பட்ட தவறுதானே தவிர, அண்ணாமலை வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

அதேசமயம், ட்விட்டரில் அவரது பதிவு மொழி பெயர்ப்பு இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியாகி இருப்பதை காணலாம்.

Archive

சமூக ஊடகங்களில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி கூறினார் என்று வதந்தி பரவிய நிலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அண்ணாமலை குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவின் தமிழாக்கத்தையும் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், "குஜராத்தில் நடந்த பால விபத்து குறித்து நான் பதிவிட்டிருந்த செய்தி முகநூலால் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது.

இதனை தெளிவுபடுத்தும் விதமாக குஜராத் சம்பவத்தை பற்றி பதிவிட்டிருந்த செய்தியை தமிழில் மீண்டும் ஒரு முறை பதிவிடுகிறேன். "குஜராத் மோர்பி நகரில் நடந்த பால விபத்து பெரும் மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தப் பால விபத்தில் சிக்கிய பலரைக் காப்பாற்றிய மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் அண்ணாமலை வெளியிட்ட ட்வீட் பதிவுக்கு ட்விட்டர் நிறுவனம் வழங்கிய தவறான மொழிபெயர்ப்பை வைத்து வதந்தி பரப்பியது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் தவறான மொழிபெயர்ப்பை வைத்து, குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அண்ணாமலை நன்றி கூறினார் என்று வதந்தி பரப்பியிருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False