
நர்மதா – ஷிப்ரா நதிகள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டதாகவும், இது மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும், இதேபோல் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அந்த தண்ணீர் ஆற்றில் விடப்படுகிறது. எந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அந்த வீடியோவில் இல்லை.
நிலைத் தகவலில், நேற்று நர்மதா நதி, குழாய் மூலம் க்ஷிப்ரா நதியுடன் இணைக்கப்பட்டது. இது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் முதல் வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதேபோல “கோதாவரி – காவேரி திட்டம் அடுத்து முடிக்கப்படும். இதன் நடுவில் தமிழ் நாட்டில் உள்ள நதிகள் இணைக்கப்பட்டால், பிறகு தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளனர். கடைசியில், தங்களின் மிகப்பெரிய கவலையையும் வெளியிட்டுள்ளனர். அதாவது, “தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விட்டால் போராட்டம் செய்தே தங்கள் வயிற்றை நிறைக்கும் டுமீல் போராளீஸ் சோத்துக்கு என்ன பண்ணுவாங்க …???” என்று தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த பதிவை, K V Sivaraman Iyer என்பவர் 2019 ஜூலை 17ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் குறிப்பிட்டது போல 2019 ஜூன் 16ம் தேதி அல்லது சமீபத்தில் நர்மதா – ஷிப்ரா நதி இணைக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். இதற்காக நர்மதா பள்ளத்தாக்கு வளர்ச்சி ஆணையத்தின் இணையதளம் சென்று பார்த்தோம். அதில், Narmada Kshipra Simhasth Link Project என்று ஒன்று தகவல் இருந்தது. அதை சென்று பார்த்தோம்.
அதில், நர்மதா – ஷிப்ரா நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு மத்திய பிரதேச முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சௌகான் ஆகஸ்ட் 8, 2012ல் அனுமதி அளித்தார். 434 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டது. 2012 நவம்பர் 29ம் தேதி நடந்த விழாவில் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். 14 மாதங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் படி நர்மதா நதியில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜய்னி என்ற கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. 2014 பிப்ரவரி 4ம் தேதி நர்மதா நதி தண்ணீர் குழாய் மூலம் இணைக்கப்பட்டது” என்று கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தொடர்ந்து இந்த திட்டம் தொடர்பாக தேடிய போது பல செய்திகள், வீடியோக்கள் 2014ல் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றே கூறின. வாஜ்பாயின் கனவு திட்டத்தை அத்வானி திறந்து வைத்தார் என்று அப்போது செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் இந்த நதி இணைப்புத் திட்டம் என்பது 2014ல் முடிந்துவிட்டது உறுதியானது. ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோ எது தொடர்பானது என்று தேடினோம்.
அப்போது, Avantika Express News என்ற யூடியூப் சேனல் வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், உஜ்ஜய்னி நகரில் உள்ள திரிவேணி காட் என்ற இடத்திற்கு நர்மதா தண்ணீர் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. உஜ்ஜய்னி நகரம் தண்ணீர் பஞ்சத்தால் அவதியுறும் சூழலில், இந்தூரில் உள்ள நீர் அழுத்த மையத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையில் இருந்து நகரம் தப்பியது என்று குறிப்பிட்டிருந்தனர்.
நர்மதா –ஷிப்ரா நதி இணைக்கப்பட்டதாகவோ, நிதின் கட்கரியின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றோ எந்த ஒரு தகவலும் அந்த செய்தியில் இல்லை.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்ட அதே வீடியோ நமக்கு யூடியூபில் கிடைத்தது. அதில் கூட, நர்மதா – ஷிப்ரா குழாய் வழியாக நர்மதா நீர் வந்தடைந்தது என்றே தெரிவித்திருந்தனர்.
நம்முடைய தேடலில், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி ஒன்று கிடைத்தது. அதில், “நர்மதா – ஷிப்ரா நதி இணைப்பு 2014ல் முடிந்துவிட்டது. ஷிப்ரா நதியில் நடக்க இருந்த கும்பமேளாவையொட்டி, ஷிப்ரா நதி உருவாகும் இடத்திற்கு அருகேயே நர்மதா ஆற்று நீர் வந்து சேரும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் (2018ம் ஆண்டு) இந்த திட்டத்திற்கு அடிக்கல்நாட்ட உள்ளார்” என்று நர்மதா பள்ளத்தாக்கு மேம்பாட்டு ஆணையம் அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நர்மதா ஆற்றில் எடுக்கப்படும் தண்ணீர், குழாய் வழியாக கொண்டுவரப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜய்னி என்ற கிராமத்தில் ஷிப்ரா நதியுடன் கலக்கப்பட்டது. கும்பமேளா முடிந்த பிறகு இந்த குழாய் வழியாக தண்ணீர் அனுப்புவது பெருமளவு குறைந்தது. தற்போது உஜ்ஜய்னி கிராமத்தில் இருந்து 66 கி.மீ தொலைவில் உஜ்ஜய்னி என்ற நகரத்துக்கு நேரடியாக தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த உஜ்ஜய்னி என்பது மத்திய பிரதேச மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரம்.
இப்போது, வரட்சி காரணமாக உஜ்ஜய்னி நகரத்துக்கு நேரடியாக நர்மதா தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவும் சிவராஜ் சிங் சௌகான் ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. 66.17 கி.மீ தூரத்துக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனையோட்டமாக தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக உஜ்ஜய்னி நகர மக்கள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படுவதுடன் சிறு பாசன விவசாயிகள், தொழிற்சாலைகளும் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் வேறு ஒரு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, நதிகள் இணைப்பு திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தவறான தகவலை அளித்தது உறுதியானது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. நிதின் கட்கரிக்கு தற்போது சாலை போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நதி, நீர் தொடர்பான அனைத்து துறைகளும் ஜல் சக்தி என்ற அமைச்சகம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் மாற்றப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில், நதி நீர் இணைப்பு என்பது இனி ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கையில்தான் உள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

கோதாவரி – காவிரி இணைப்பு எந்த அளவில் உள்ளது என்று ஆய்வு செய்தோம். மகாநதி – கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு ஒடிஷா அரசு ஆர்வம் காட்டவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதிக அளவிலான நிலப்பரப்பு தண்ணீருக்கு அடியில் செல்லும் என்பதால் ஒடிஷா எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால், கோதாவரி – காவிரி திட்டமும் தாமதம் ஆகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதிக அளவிலான நிலப்பரப்பு நீருக்கடியில் செல்லும் என்பதால் எதிர்ப்பு உள்ளதாம். இதனால், மாற்று திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, சட்டீஸ்கர் மாநிலத்துக்கும் கோதாவரி ஆற்றுநீரை பகிர்ந்தளிக்கும் வகையில் மாற்று திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியாத நிலையில் உள்ளது தெரிந்தது. இது தொடர்பாக மத்திய அரசின் இணையத்தில் வெளியான தகவலைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
1) நர்மதா – ஷிப்ரா நதி நீர் இணைப்பு என்பது 2014ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது.
2) ஷிப்ரா நதி உற்பத்தியாகும் இடத்திற்கு பதில், புதிதாக குழாய்கள் அமைத்து உஜ்ஜய்னி திரிவேணி காட் என்ற இடத்தில் தண்ணீர் வரும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
3) இந்த திட்டத்தின் சோதனை ஓட்டமாக தண்ணீர் வந்துள்ள வீடியோவை பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
4) இந்த திட்டம் முழுக்க முழுக்க மத்திய பிரதேச மாநில அரசின் திட்டம். இந்த திட்டத்தைத் தொடங்கி நிறைவடைந்தபோது மத்திய பா.ஜ.க ஆட்சியிலேயே இல்லை. இதன் மூலம், நிதின் கட்கரிக்கும் இந்த திட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியாகிறது.
5) 2018ம் ஆண்டு புதிய திட்டத்தை அடிக்கல் நாட்டியதும் பா.ஜ.க-வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சௌகான்தான்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நர்மதா – ஷிப்ரா நதி இணைப்பு நிதின் கட்கரியின் முதல் சாதனையா?
Fact Check By: Praveen KumarResult: False
