வங்கதேசத்தில் இந்து கோவில் எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷில் தீ வைத்து கொளுத்தப்படும் இந்து கோவில்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் சிறுபான்மை மக்களான இந்துக்களைத் தாக்குவதாக இந்தியாவில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், வங்கதேசத்தில் இந்து கோவில் ஒன்று தாக்கப்பட்டது என்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவில் உள்ள கட்டிடத்தைப் பார்க்கும் போது இந்து கோவில் போல இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம். பாஜக எம்.பி-யும் பிரபல நடிகையுமான கங்கனா முதல் பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் இந்து கோவில் எரிக்கப்பட்டது என்று பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இது வங்கதேசத்தில் எந்த ஊரிலிருந்த இந்து கோவில் என எதையும் குறிப்பிடவில்லை.

தொடர்ந்து தேடிய போது, இந்த கட்டிடத்தின் முன்பு இருந்து எடுக்கப்பட்ட பழைய வீடியோக்கள் சில நமக்குக் கிடைத்தன. சத்கிரா மாவட்டத்தில் கலரோவாவில் (Raj Palace, Kalaroa, Satkhira District) 100 கோடி செலவில் கட்டப்பட்ட அரண்மனை என்று அந்த வீடியோ பற்றிய தலைப்பு பகுதியில் வங்கத்தில் எழுதப்பட்டிருந்தது.அந்த வீடியோவை பார்த்தோம்... சாலையில் இருந்து வாசலைத் தாண்டி உள்ளே செல்கின்றனர். அப்போது வாசலில் ஒரு போர்ட்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் வங்க மொழியில் எழுதப்பட்டிருந்ததை மொழிபெயர்த்துப் பார்த்த போது ராஜ் பேலஸ் மற்றும் உணவு விடுதி என்று எழுதப்பட்டிருந்தது. பல அசைவ உணவுகளின் படங்களை அதில் காண முடிந்தது.

வாசலைத் தாண்டி உள்ளே சென்ற போது அங்கு ஒரு நீரூற்று இருக்கிறது. அதில் அரபு வாசகம் பொருத்தப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த கட்டிடம் இந்து கோவில் இல்லை என்பதை உறுதி செய்தன. வேறு பல பழைய வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. அவற்றைப் பார்க்கும் போது இது இந்து கோவில் இல்லை என்பது தெளிவானது.

ராஜ் பேலஸ் என்று வீடியோக்கள் பல கிடைத்ததால் அதை வைத்து கூகுள் மேப்-ல் தேடிப் பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கட்டிடம் வங்கதேசத்தில் இருப்பதும். அது இந்து கோவில் இல்லை, உணவகம்தான் என்பதும் உறுதியானது.

Google Map

தொடர்ந்து தேடிய போது இந்த கட்டிடம் எரியும் புகைப்படத்துடன் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது என்றும், அதைத் தொடர்ந்து கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தீ வைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்து கோவில் அங்கு எரிக்கப்பட்டதாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: kalbela.com I Archive

நம்முடைய ஆய்வில் வங்கதேசத்தில் எரிக்கப்பட்ட இந்து கோவில் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் இடம் எங்கே உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அது இந்து கோவில் இல்லை உணவகம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வங்கதேசத்தில் இந்து கோவில் எரிக்கப்பட்டது என்று பரவம் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்று எரிக்கப்பட்ட வீடியோவை எடுத்து, இந்து கோவில் எரிக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இந்து கோவில் எரிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: Misleading