
முகலாய அரசர் ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் புகைப்படம் வெளியானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பழைய புகைப்படங்களை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மும்தாஜின் புகைப்படங்கள் வெளியானது. இந்த மூஞ்சிக்கா அவ்வளோ பெரிய தாஜ்மஹால்னா…! ஐஸ்வர்யாராய் மாதிரி இருந்த என்ன பன்னிருப நீ சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
1800 களின் தொடக்கத்தில்தான் முதல் கேமரா உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு கேமராவை உருவாக்கப் பலரும் முயற்சி செய்தாலும் அது வெற்றிபெறவில்லை. கேமராவின் வரலாறு இப்படி இருக்கும் போது, கேமரா கண்டுபிடிக்கப்படுவதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட மும்தாஜின் புகைப்படத்தை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
ஏதோ ஒரு பழைய இளவரசியின் புகைப்படத்தை எடுத்து தாஜ்மஹால் கட்ட காரணமாக இருந்த மும்தாஜ் இவர்தான் என்று வதந்தி பரப்பியிருக்கலாம் என்று இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, படத்தில் இருப்பவர் மும்தாஜ் இல்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive
இந்த புகைப்படத்தில் இருப்பது பேகம் ஆஃப் போபால் என்று குறிப்பிட்டுப் பல செய்திகள் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. சுல்தான் ஷா ஜஹான் என்பது அவரது பெயர் என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவரைப் பற்றிப் படித்துப் பார்க்கும் போது, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கல்விக்கு, குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் என்று தெரிந்தது. பல புத்தகங்களை எழுதியுள்ளார். போபாலில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் என்ற அரண்மனையை இவர் கட்டினார் என்று தெரிந்தது. இதை வைத்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுடன் இவரை தவறாக தொடர்புப்படுத்திப் பதிவிட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive
நம்முடைய ஆய்வில், ஆக்ரா தாஜ்மஹால் கட்ட காரணமாக இருந்த ஹாஜஹானின் மனைவி மும்தாஜ் இவர் தான் என்று பரவும் புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போபாலை ஆட்சி செய்த பேகம் ஷாஜஹான் என்ற பெண் ஆட்சியாளர் புகைப்படத்தைத் தவறாக மும்தாஜ் என்று பகிர்ந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
முகலாய மன்னர் ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் உண்மையான புகைப்படம் என்று பரவும் படம் தவறானது என்பதையும் இந்த புகைப்படம் போபால் அரசியினுடையது என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் இவர்தான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
