
தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டதால் தான் தமிழகத்தில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தமிழகத்தைச் சார்ந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் டிராக்டர் வண்டியில் மீட்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் வரும் போது வீடுகள், கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காண முடிகிறது. பின்னணியில் “கடலின் நடுவே பயணம் போனால்” என்று பழைய எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல் ஒலிக்கிறது.
உண்மைப் பதிவைக் காண: x.xom I Archive
நிலைத் தகவலில், “முப்பது கோடிக்கு பங்களா முப்பது லட்சத்துக்கு கார் இருந்தாலும் திமுகவுக்கு ஓட்டு போட்டால்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி செய்வதால் மட்டுமே மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படுவது போலவும், இதற்கு முந்தைய ஆட்சியில், வேறு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பே இல்லாதது போலவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் வீடுகள், கார்கள் மூழ்கியிருக்கும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு தி.மு.க ஆட்சியில் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை முன்பே பார்த்த நினைவு இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2022 ஆண்டில் இருந்து இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், இந்த வீடியோ பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோக்களில் ஆடியோ எடிட் செய்யப்படவில்லை. அவர்கள் கன்னடத்தில் பேசியதைக் கேட்க முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive
இந்த விடியோவில் இடம் பெற்ற காட்சியை வைத்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செப்டம்பர் 7, 2022 அன்று செய்தி வெளியாகி இருந்தது. அதில், இந்த இடம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்தன.
இந்த வீடியோவை அதிக அளவில் பாஜக-வினர் பகிர்ந்து வருகின்றனர். 2022ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசு தான் ஆட்சியில் இருந்தது. இதற்காக பாஜக-வுக்கு வாக்களித்ததால் தான் வீடுகள், கார்கள் மழை நீரில் மூழ்கியது என்று கூறிவிட முடியுமா? இயற்கை நிகழ்வுகள் நடக்கும் போது அதை எதிர்கொள்ள வேண்டும். குறை கூறுவதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுவதே சிறந்தது!
நம்முடைய ஆய்வில், திமுக ஆட்சியின் திறமையின்மை காரணமாக மழை வெள்ளத்தில் வீடுகள், கார்கள் மூழ்கின என்று பரவும் வீடியோ கர்நாடகாவில் 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2022ம் ஆண்டு பெங்களூருவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு வீடியோவை தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:தி.மு.க-வுக்கு வாக்களித்ததால் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
