லால்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்தது என்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Crocodiles 2.png
Facebook LinkArchived Link

இரண்டு தனித்தனிப் படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "லால்பேட்டையில் கனமழை👇👇👇லால்ப்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்துவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Samsudeen Safik என்பவர் டிசம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

லால்பேட்டையில் முதலை வந்துவிட்டது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அது எந்த மாவட்டத்தில் உள்ளது, எப்போது என்று எந்த தகவலும் இல்லை. லால்பேட்டை என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது அது கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை என்று ஒரு ஊர் உள்ளதாக காட்டியது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொள்ளிடம் ஆற்றை ஒட்டியப் பகுதிகளில் அவ்வப்போது முதலைகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்தான். அதனால், இது உண்மையாக இருக்கும் என்று எண்ணி பலரும் ஷேர் செய்து வருவது தெரிந்தது.

அங்கு முதலை வந்த சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா என்று தேடினோம். கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் கன மழை பெய்த தகவல் கிடைத்தது. ஆனால், ஊருக்குள் முதலை நுழைந்தது போன்ற எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

Crocodiles 3.png
Search Link

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த செய்தி உண்மையா என்று உறுதி செய்ய முயன்றோம். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை எங்கே உள்ளது என்று கூகுள் மேப்பில் தேடினோம். அப்போது, அது காட்டுமன்னார்கோவிலுக்கு மிக அருகில் இருப்பது தெரிந்தது. எனவே காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்தை (04144-262023) தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசியவர்கள் அப்படி எந்த ஒரு சம்பவமும் லால்பேட்டையில் மட்டுமல்ல காட்டுமன்னார்கோவிலிலேயே நடக்கவில்லை என்றனர்.

இந்த படங்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இரண்டு படங்களுமே இலங்கையில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. பல ஆண்டுகளாகவே இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும் தெரிந்தது.

Crocodiles 4.png
dailynews.lkArchived Link 1
supeedsam.comArchived Link 2

ஒருவேளை இலங்கையில் ஏதாவது லால்பேட்டை இருந்து அங்கு இந்த சம்பவம் நடந்திருக்குமா என்று சந்தேகத்தில் பதிவிட்டவரின் விவரத்தைப் பார்த்தோம். அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் என்றும், புதுச்சேரியில் வசிப்பதாகவும், சிதம்பரம் (காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ளது) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்றும் தெரிந்தது. எனவே, அவர் குறிப்பிட்டது கடலூர் லால்பேட்டைதான் என்பது உறுதியானது.

Crocodiles 5.png

நம்முடைய ஆய்வில்,

லால்பேட்டையில் முதலை நுழைந்ததாக பரவும் தகவல் தவறானது என்று காட்டுமன்னார்கோவில் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

பதிவில் இடம் பெற்ற படங்கள் இலங்கையில் எடுத்தது என்று உறுதியாகி உள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், லால்பேட்டையில் கன மழை காரணமாக முதலை ஊருக்குள் வந்தது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:லால்பேட்டையில் நுழைந்த முதலை! - ஃபேஸ்புக் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False