கோவை குனியமுத்தூர் சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெங்களூரு சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்த பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இது விண்வெளி அல்ல..... திராவிட மாடலில் சிதைந்த குனியமுத்தூர், சுகுணாபுரம் சாலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Jeyakumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பொதுவாக, முன் பின் பார்த்திராத புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து விஷமிகள் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவார்கள். ஆனால், அனைவருக்கும் ஓரளவுக்குப் பிரபலமான வீடியோ ஒன்றை வைத்து தற்போது வதந்தி பரப்பியுள்ளனர். பெங்களூரு சாலை மிக மோசமாக உள்ளது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

நிலவில் இருப்பது போன்று சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் காட்ட விண்வெளி வீரர் போன்று ஆடை அணிந்து ஒருவர் சாலையில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோவை எடுத்து கோவை குனியமுத்தூர் சாலை என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். பெங்களூருவில் எடுக்கப்பட்டது போன்று கோவையிலும் வீடியோ எடுத்துள்ளார்களா அல்லது பெங்களூருவில் எடுக்கப்பட்டதை விஷமத்தனத்துடன் பதிவிட்டுள்ளார்களா என்பதை அறிய ஆய்வு செய்தோம்.

முதலில் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை தேடி எடுத்தோம். அந்த வீடியோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒன்று என்று தெளிவாகத் தெரிந்தது. வீடியோவில் ஆட்டோ மற்றும் சில வாகனங்கள் விண்வெளி வீரர் போன்று ஆடை அணிந்தவரைக் கடந்து செல்லும். அந்த காட்சி எல்லாம் அப்படியே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் உள்ளது.

உண்மைப் பதிவைக் காண: zeebiz.com I Archive

கோவை குனியமுத்தூர் சாலை எப்படி உள்ளது என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்த வீடியோ கோவை குனியமுத்தூரில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம். நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2019ம் ஆண்டு பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோவை குனியமுத்தூர் சாலை மிக மோசமாக உள்ளது என்பதை காட்ட மூன்வாக் செய்த நபர் என்று பரவும் வீடியோ 2019ல் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இது விண்வெளி அல்ல... கோவை குனியமுத்தூர் சாலை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

Written By: Chendur Pandian

Result: False