அதிமுகவை விட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

அதிமுகவை விட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும். அதிமுகவைவிட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி நாங்கள் ஒதுக்கும் இடங்களில் அதிமுக போட்டியிடும் – அதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் அண்ணாமலை பேட்டி” என்று இருந்தது.

இந்த பதிவை லாவண்யா கண்ணதாசன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 30ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் அ.தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தையில் கேட்ட இடங்களை அதிமுக ஒதுக்காத சூழலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அண்ணாமலை அறிவித்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த சூழலில் அதிமுக-வை விட பாஜக-வே பலம் வாய்ந்த கட்சி என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்வையிட்டோம். இதே போன்ற படத்துடன் கூடிய நியூஸ் கார்டை கடந்த 29ம் தேதி தந்தி டிவி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

ஆனால் அதில், “பாஜக வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்கி அதிமுகவிடம் கோரியுள்ளோம். மாவட்ட தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்” என்று இருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான கருத்தை சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.

2026ல் தமிழகத்தில் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம், தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜக-தான் என்று எல்லாம் தொடர்ந்து அண்ணாமலை மற்றும் அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். எனவே, அதிமுக-வை விட பாஜக வலிமையான கட்சி என்று அண்ணாமலை எங்காவது கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம்.

அதிமுக-வுடனான கூட்டணி முறிவு பற்றி அண்ணாமலை விளக்கம் அளித்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூட அதிமுக பெரிய கட்சி என்று அவர் கூறியிருந்தார். வரும் நாட்களில் அதிமுக – பாஜக நல்லுறவு தொடரும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அகில இந்திய அளவில் தொடர்கிறது என்றும் கூறியுள்ளார். மற்றபடி அதிமுக-வை விட பாஜக பெரிய கட்சி என்று அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தமிழ்நாடு பாஜக ஊடக பிரிவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பியிருந்தோம். அவரும் இது போலியானது என்று கூறியிருந்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அதிமுக-வை விட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அதிமுக-வை விட பாஜக-வே பலம் வாய்ந்த கட்சி என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அதிமுகவை விட பாஜகவே பலம் வாய்ந்த கட்சி என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False