
ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என மதவாத சங்கிகள் கூட்டம் கூறியது. ஆனால் முதல் முறையாக ராணுவம் தன் கடமையைச் சரியாக செய்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை K G Ramesh Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 14ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஹரியானாவில் இந்துத்துவா அமைப்புகள் நடத்திய பேரணி கலவரத்தில் முடிந்தது. அங்கு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களிலும் வதந்தி பரப்பப்பட்டு வருகின்றன.
ஹரியானா கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. எனவே, ராணுவ வீரர்கள் வந்து கலவரக்காரர்களை தாக்கினார்கள் என்று பரவும் தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், சில வாரங்களுக்கு முன்பு பீகாரில் பாஜக-வினர் போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே அவர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டிய வீடியோ போல இது இருக்கவே ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த மாதம் பீகாரில் நடந்த பாஜக போராட்டத்தின் போது போலீஸ் தடியடி நடத்திய வீடியோக்கள் மற்றும் செய்திகள் மட்டும் நமக்கு கிடைத்தன. அதே வீடியோ கிடைக்கவில்லை. ஆனால், அதே பகுதியில் வேறு வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.
அதே வீடியோ கிடைக்கிறதா என்று தொடர்ந்து தேடினோம். அப்போது, NEWS9 Live என்ற யூடியூப் சேனலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. 7.43 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் 3.45 நிமிடங்களுக்குப் பிறகு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சியை காண முடிந்தது. மேலும் ஆடியோவும் ஒத்துப் போனது. இதன் மூலம் இந்த வீடியோவை எடுத்து தவறான செய்தியை பரப்பியிருப்பது தெளிவாகிறது.

வீடியோவில் தடியடி நடக்கும் பகுதியில் உள்ள கடைகள், பாட்னாவில் போராட்டம் நடந்த பகுதியில் உள்ளதா என்பதை அறிய, கூகுள் மேப்-ல் தேடிப் பார்த்தோம். முதலில் லத்திச்சார்ஜ் செய்யப்பட்ட இடத்தின் பெயரை செய்திகள் மூலம் அறிந்துகொண்டு, அதன் அடிப்படையில் கூகுள் மேப்பில் தேடினோம். அந்த பகுதியும் நமக்கு கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் தெரிந்த கடைகளை எளிதில் அடையாளம் காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ பாட்னாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
நம்முடைய ஆய்வில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 ஜூலை 13ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் பீகாரில் பாஜக தொண்டர்கள் மீது லத்திசார்ஜ் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினரை ராணுவம் விரட்டியடித்தது என்று பரவும் வீடியோ 2023 ஜூலை முதல் வாரத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினரை விரட்டியடித்த ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False


