
காஷ்மீர் சட்டமன்றத்தில் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியதற்காக இந்து எம்.எல்.ஏ-க்கள் வெளியெற்றப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்த எல்லா பாஜக எம்.எல்.ஏ-க்களையும் வெளியேற்றம் செய்வது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்ட பிறகு, பின்வரும் காட்சியை கண்களை விரித்து பாருங்கள்,*
*இப்போது பார்க்கவும், நம் நாட்டில் இந்துக்களின் நிலை இதுதான்!*
*அடுத்து என்ன?* *இப்படி ஒவ்வொரு அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வந்தால் என்ன நடக்கும்???*
*உங்கள் தலைவர், உங்கள் கட்சி மற்றும் யார் என்று நினைக்காதீர்கள்; உங்கள் மதத்திற்கு வாக்களியுங்கள்.* *கீழே உள்ள காட்சி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், ‘பாரத் மாதா கோ ஜெய்’ என்ற கோஷத்தை எழுப்பியதால், பாஜக எம்எல்ஏ ஒருவர் சட்டசபையிலிருந்து தூக்கி எறியப்பட்ட காட்சி.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஷ்மீரில் முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் பெரும்பான்மை பெற்றதால் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பிய பாஜக எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டது போன்று ஃபேஸ்புக்கில் விஷம கருத்து பகிரப்பட்டுள்ளது. யார் நல்லது செய்வார்கள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு மதத்தைப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று மிகக் கொடிய விஷக் கருத்தைப் பரப்பியுள்ளனர். இந்த கொடிய நச்சுக் கருத்துக்குள் செல்லவில்லை. இந்த சம்பவம் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
2019ம் ஆண்டு பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆர்டிகிள் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில்தான் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தது. மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு பாஜக எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றபடி பாரத் மாதா கி கோஷத்துக்கு எல்லாம் எதிர்ப்பு வந்ததாக எந்த செய்தியும் வரவில்லை. எனவே, வீடியோவை எடிட் செய்து விஷமத்தை பரப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive
யூடியூபில் ஜம்மு காஷ்மீர், 370, பாஜக எம்.எல்.ஏ என்பது உள்ளிட்ட சில அடிப்படை வார்த்தைகளைப் பதிவிட்டு தேடிப் பார்த்தோம். அப்போது பாஜக எம்.எல்.ஏ பாரத் மாதா கோஷம் எழுப்பிய முழு வீடியோவும் கிடைத்தது. அந்த எம்.எல்.ஏ பாரத் மாதா கோஷம் எழுப்பி முடித்த பிறகும் தலையை சொறிந்தபடி அங்கேயே தான் நின்று கொண்டிருந்தார். யாரும் அவரையோ, மற்ற பாஜக எம்.எல்.ஏ-க்களையோ வெளியேற்றவில்லை. அந்த வீடியோவில் ஆர்டிகிள் 370 தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் அமளி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக எம்.எல்.ஏ-க்களை சபை காவலர்கள் வெளியே தூக்கிச் செல்லும் காட்சியை தேடிப் பார்த்தோம். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில் முதலில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்படுகின்றனர். அதன் பிறகே பாரத் மாதா கோஷத்தை மற்றொரு பாஜக எம்.எல்.ஏ எழுப்புகிறார். அதை அப்படியே தலைகீழாக மாற்றி, கோஷம் முதலில் எழுப்பப்பட்டது போலவும், அதைத் தொடர்ந்து வெளியேற்றம் செய்யப்பட்டது போலவும் விடியோவை எடிட் செய்திருப்பது தெரிந்தது.
அந்த வீடியோ தொடர்பாக ஏஎன்ஐ வெளியிட்டிருந்த பதிவில். “நவம்பர் 8ம் தேதி ஆர்டிகிள் 370ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரத் மாதா கி ஜே என்று கோஷம் எழுப்பினர். தடையை மீறி அவையின் மையப் பகுதிக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் எழுப்பியதால் இவர்கள் வெளியேற்றப்படவில்லை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் ஆர்டிகிள் 370ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த வெளியேற்றச் சம்பவம் நடந்துள்ளது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆர்டிகிள் 370ஐ மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்திற்கு எதிராக காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் போராட்டம் நடத்தியதை இந்து – முஸ்லிம் பிரச்னையாக மாற்றி சமூக ஊடகங்களில் விஷம வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:காஷ்மீரில் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டதால் இந்து எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டார்களா?
Written By: Chendur PandianResult: False
