காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் ஒன்று பிரம்மாண்ட பாலத்தைக் கடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலகின் மிக உயரமான ரெயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி359 மீ.உயரத்தில் 1315 நீளத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட் டுள்ள ரெயில் பாலம் இதுதான்.

272 கிமீ தூரமுள்ள உதம்பூர் – ஶ்ரீநகர் – பாரமுல்லாவை இணைக்கிறது இப்பாலம். பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் & இராணுவ வீரர்கள் எளிதாகச் சென்றுவர பெரிதும் பயன்படும். #மோடி_சர்கார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவை Kayathri Sangar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

உலகின் மிக உயரமான ரயில் பாதை காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாதை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக சில தினங்களுக்கு முன்பு மத்திய ரயில்வே அமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் உள்ள பாலத்துக்கும் இந்த பாலத்துக்கும் இடையே வித்தியாசத்தைக் காண முடிந்தது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பாலத்தின் வளைவுக்கு சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டதாக வெளியான வீடியோவில் பாலத்தின் வளைவின் நிறம் சிவப்பாக இல்லை. மேலும் பாலம் தொடங்கும் பகுதியில் பாறைகள் படிக்கட்டு போல செதுக்கப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அப்படி இல்லை. எனவே, வேறு எங்கோ எடுத்த வீடியோவை தவறாகப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: ddcpc.cn I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ஆய்வு செய்தோம். அப்போது, ஒரு ஃபிரேம் புகைப்படத்தில் சீன எழுத்துக்களைக் காண முடிந்தது. எனவே, இது சீனாவில் உள்ள ரயிலாக இருக்கலாம் என்று ஆய்வைத் தொடர்ந்தோம். இந்த படத்தை கூகுள், yandex.com போன்ற இணையதளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த ரயில் பாதை சீனாவில் இருப்பது தெரிந்தது. Beipanjiang பாலம் என்று குறிப்பிட்டு சில வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. அந்த வீடியோவும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒத்துப்போகின்றன.

இந்தியாவில் கட்டப்பட்டு வரும் பாலம் தொடர்பாக பார்வையிட்டோம். Chenab என்ற ஆற்றின் மீது இந்த பாலம் கட்டப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. 2002ல் திட்டமிடப்பட்டது. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மை தொடர்பாக சந்தேகம் காரணமாக தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தாமதம் ஆகின. பாலம் 2022 ஆகஸ்டில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில் பாதை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. 

Archive

இதை உலகின் மிக உயரமான ரயில் பாதை என்றும் கூற முடியாது. இதன் உயரம் 1188 அடி. சீனாவில் உள்ள Beipanjiang பாலம் 1854 அடி உயரத்தில் கட்டப்படுகிறது. சீனாவில் மற்றொரு பாலம் 2100 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டில் அந்த பாலம் கட்டி முடிக்கப்படும் போது உலகின் மிக உயரமான பாலமாக அது இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உள்ள ரயில் பாதை சீனாவில் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது என்று பரவும் வீடியோ சீனாவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False