இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று பாடகி சின்மயி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive

சின்மயி, இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா ஆகியோர் புகைப்படங்களை ஒன்று சேர்த்து வெளியிட்ட செய்தியின் தலைப்பு மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து threads-ல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "என்னை கட்டிலில் தூக்கி போட்டு.. அப்படி நடந்து கொண்டார்.. துடுப்பாட்ட வீரர் மலிங்கா மீது சின்மயி குற்றச்சாட்டு" என்று இருந்தது. நிலைத் தகவலில், "இவளை #போடாத ஆளே இல்லை போல , இது ல #பத்தினி "வேஷம்" வேற" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

என்னைக் கட்டிலில் தூக்கிப் போட்டு அப்படி நடந்து கொண்டார் என்று சின்மயி தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறியது போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. பிரபல பாடலாசிரியர் ஒருவர் மீது சின்மயி குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் மீதும் அவர் குற்றச்சாட்டு எழுப்பியதாகத் தகவல் பரவவே இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

கூகுளில் சின்மயி, மலிங்கா, ட்விட்டர் என்று டைப் செய்து தேடிய போது, 2018ம் ஆண்டு சின்மயி தன்னுடைய எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு கிடைத்தது. அதில், மலிங்கா ஒரு பெண்ணிடம் நடந்து கொண்ட செயல் என்று இரண்டு பதிவாக சின்மயி வெளியிட்டிருந்தார். அதில் முதல் வரியிலேயே நான் யார் என்று வெளியே தெரியாத நபராக இருக்க விரும்புகிறேன் என்று உள்ளது. மேலும் மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் மலிங்கா தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று அந்த பெண் கூறியதாக சின்மயி வெளியிட்டிருந்த அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவு குழப்பத்தைப் போக்கும் வகையில் இல்லை என்பதால் தொடர்ந்த இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடிய போது, 2018ம் ஆண்டு ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயலும் நபர்கள் பற்றி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை சின்மயி எழுப்பி வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னிடம் கூறிய தகவல் அடிப்படையில் இந்த பதிவை சின்மயி வெளியிட்டு வருகிறார் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

அந்த வகையில், மீ டூ (Me Too) எனப்படும் தனக்கும் பாலியல் வன்கொடுமை நடந்தது என்று பொதுவெளியில் குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் இயக்கத்தில் பெண் ஒருவர் தன்னிடம் கூறியதை சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2018ல் வெளியிட்டிருந்தார் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் தனக்கு நடந்ததாக சின்மயி கூறவில்லை என்பது தெளிவானது.

அடுத்ததாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தலைப்பை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். tamizhakam.com என்ற இணைய ஊடகத்தில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. 2018ம் ஆண்டு சின்மயி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவை வைத்து 2024 ஜூலையில் இப்போது இந்த செய்தி வெளியிட்டிருந்தனர். "என்னை கட்டிலில் தூக்கிப் போட்டு.. அப்படி நடந்து கொண்டார்.. துடுப்பாட்ட வீரர் மலிங்கா மீது சின்மயி குற்றச்சாட்டு..!" என்று தலைப்பிட்டிருந்தனர். இந்த தலைப்பு மலிங்கா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று சின்மயி கூறினார் என்ற அர்த்தத்தையே அளிக்கிறது. இந்த தலைப்பே தவறானது என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக செய்தியின் உள்ளே பார்த்தோம். சின்மயி பிறந்ததில் இருந்து, பாடகியாக பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராக பணியாற்றியது வரையிலான கதையை மிக நீளமாகக் கொடுத்திருந்தனர். கடைசியில் "பிரபல கிரிக்கெட் வீரர் மலிங்கா ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை தனது எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி பதிவு செய்திருக்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தொடர்ந்த படிக்கும் போது இந்த சம்பவம் வேறு ஒரு பெண்ணுக்கு நடந்தது என்று கூறுகிறார்களா அல்லது சின்மயி தனக்கு நடந்தது என்று கூறுகிறாரா என்ற தெளிவின்றி எழுதி வைத்திருந்தனர்.

ஒரு முறை பாடகி மும்பை சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்தது என்றும் மலிங்கா என்னை படுக்கை அறையில் தள்ளி தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று சின்மயிக்கு நடந்தது போல குறிப்பிடுகின்றனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அவர் பிரபலம் என்பதால் நான் வேண்டுமென்றே அவரது ரூமுக்கு சென்று இருப்பேன் என்று சொல்லி இருப்பார்கள் என்று அந்த பெண் குறிப்பிட்டிருக்கிறார் என்று வேறு ஒரு பெண் கூறியது போலவும் குழப்புகின்றனர். இறுதியில் இந்த சம்பவம் சின்மயிக்கு நடந்தது இல்லை என்பது மட்டும் நமக்குத் தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: tamizhakam.com I Archive

வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சின்மயியிடம் மலிங்கா தவறாக நடந்து கொண்டது போன்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்த தலைப்பை மட்டும் எடுத்து சின்மயிக்கு எதிராக தவறான தகவலை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. உண்மையில் வேறு ஒரு பெண்ணுக்கு நடந்த விஷயத்தையே சின்மயி வெளியிட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

மலிங்கா மீது சின்மயி குற்றச்சாட்டுச் சுமத்தியது உண்மைதான், ஆனால் அந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் தனக்கு நடந்ததாக சின்மயி கூறவில்லை. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவோ மலிங்கா தன்னை கட்டிலில் தூக்கிப்போட்டார் என்று சின்மயி கூறும் வகையில் உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று சின்மயி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மலிங்கா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சின்மயி கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False