
புனே ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்திய தனியார் நிறுவனம் என்று ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
2020 ஆகஸ்ட் 6ம் தேதி எடுக்கப்பட்ட புனே ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவிலேயே முதல் முதலாக தனியாருக்கு கொடுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேசன். பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரொம்ப அதிகமில்லை, லேடிஸ் அண்ட் ஜென்ட்டில்மேன், ஜஸ்ட் 50 ரூப்பீஸ் தான்!
இந்த ஸ்டேசன் 2019 ல் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை Jose Kissinger என்பவர் 2020 டிசம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிளாட்ஃபார்ம் டிக்கெட் கடந்த 2020 ஆகஸ்ட் 6ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. புனே ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் 2019ம் ஆண்டு தனியாரிடம் வழங்கப்பட்டது உண்மைதான். ரயில் நிலையத்தை வாங்கிய தனியார் நிறுவனம், பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.50 ஆக வசூலிக்கிறது என்று பதிவிடப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மையானது என்று ஆய்வு செய்தோம்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது, பயணிகளை வழி அனுப்ப வருபவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது இந்த தகவல் பல மாதங்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. புனே ரயில் நிலையம் தனியாருக்கு வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் இருந்தன.
அசல் பதிவைக் காண: twitter I Archive 1 I indianexpress.com I Archive 2
இதன் அடிப்படையில் கூகுளில் தேடி, இந்திய ரயில்வே வெளியிட்ட பதிவைக் கண்டுபிடித்தோம். அதில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது முழுக்க முழுக்க கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் காக்க, தேவையற்றவர்கள் ரயில் நிலையத்துக்கு வருவதைத் தடுப்பதற்காக மட்டுமே. கட்டண உயர்வை ரயில்வே துறையே நிர்ணயிக்கிறது” என்று கூறப்பட்டு இருந்தது.
புனே ரயில் நிலையம் தற்போது தனியாருக்கு விடப்பட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது 2019 பிப்ரவரியில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ஹபீப்ஹஞ்ச் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து புனே ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.
அதில், விளம்பரம், தூய்மை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மட்டுமே தனியார் நிறுவனம் செய்யும் என்றும், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மட்டும் வசூல் செய்யும் என்றும். அதுவும் ரயில்வே அறிவித்த கட்டணத்தை வசூலித்து ரயில்வேக்கு வழங்கும் பொறுப்பு மட்டுமே தனியாருக்கு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் மற்றொரு செய்தியில் கொரோனா பரவல் காரணமாக, கொரோனாவைக் கட்டுப்படுத்த மார்ச் 18ம் தேதி முதல் பிளாட்பார டிக்கெட்களின் விலையை அந்த அந்த ரயில் நிலையங்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டது உண்மைதான். அது தற்காலிகமானது, என்று ரயில்வே கூறியிருப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்தன.
தமிழகத்திலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் திருநெல்வேலி என பல பகுதிகளில் நடைமேடைக் கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படுவதாக செய்திகள் நமக்கு கிடைத்தன.
அசல் பதிவைக் காண: vikatan.comI Archive 1 I indianexpress.com I Archive 2
இதன் மூலம் கொரோனா காரணமாக ரயில் நிலையத்தில் தேவையில்லாத கூட்டம் கூடுவதைத் தடுக்க பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்த்தப்பட்டதை, தனியார் நிறுவனம் உயர்த்தி லாபம் சம்பாதிப்பது போல தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
கொரோனா காரணமாக ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்த்தப்பட்டதை தவறாக பகிர்ந்து வருதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:புனே ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்திய தனியார் நிறுவனம்?
Fact Check By: Chendur PandianResult: Partly False
