மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பதில், சித்திரைத் திருவிழாவை தள்ளிவைக்கலாம், என்று மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தெரிவித்ததாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிய நாம் முடிவு செய்தோம். ஆய்வின் முடிவு உங்கள் பார்வைக்கு...

வதந்தியின் விவரம்

மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை சித்திரைத் திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடைவிதிக்கலாம் .ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால் மதுரை ஒன்று அழிந்துவிடாது.

சு.வெங்கடேஷ்

மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர்

Archive link

மதுரை மக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் பேசியதாக மேற்கண்ட பதிவில் கூறப்பட்டுள்ளது. மதுரையின் பிரசித்திபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவைத் தள்ளிவைக்கும்படி கூறியதாக சொல்லப்பட்டது மக்களிடம் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனால், வெங்கடேசனை திட்டியபடி பலரும் இதை ஷேர் செய்துள்ளனர். பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கடவுள் மறுப்பாளர்களாகவே அறியப்படுகின்றனர். இதனால், கண்டிப்பாக வெங்கடேசன் இப்படி பேசியிருப்பார் என்று நம்பி பகிரப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்

சித்திரைத் திருவிழா மதுரை மக்களின் பாரம்பரிய, அதிகம் விரும்பப்படும் திருவிழாவாகும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் என மதுரையே விழாக்கோலத்தில் இருக்கும். மதுரை சித்திரைத் திருவிழாவைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் மதுரையில் ஒன்றுகூடுவது வழக்கம்.

இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு மதுரை மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சித்திரைத் திருவிழா அன்று தேர்தல் நடைபெற்றால் வாக்குப் பதிவு விகிதம் குறையும் என்று பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தலை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன், தேர்தலை ஒத்திவைக்க வேண்டியது இல்லை, திருவிழாவை ஒத்திவைத்தால் போதும். ஒரு வருடம் கள்ளழகர் ஆற்றில் இறங்கவில்லை என்றால் மதுரை அழிந்துவிடாது என்று கூறியதாக ஃபேஸ்புக்கில் பிங் சந்துரு என்பவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எந்த ஒரு அதாரத்தையும் அவர் அளிக்கவில்லை.

பிக் சந்துரு குறிப்பிட்ட தகவலுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று தேடிப்பார்த்தோம். தமிழகத்தில் இருந்து வெளியாகும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திலும் அப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. கூகுளில் தேடிப் பார்த்தோம். குறிப்பிட்ட தகவல் எங்கும் இல்லை.

அதேநேரத்தில் இந்த வதந்தியை பரப்பிய பிங் சந்துரு என்பவர் மீது தேர்தல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் (CPIM Tamilnadu) இது தொடர்பாக ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "எவ்வித ஆதாரமுமின்றி பரப்பப்பட்டுள்ள இந்த அவதூறை சிபிஐ(எம்) தமிழ்நாடு வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தகைய அவதூறுகளை மதுரை பொதுமக்களும் உண்மையின்பால் அக்கறை கொண்டோரும் கண்டிக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archive link

இது தவிர, பிங் சந்துருவின் ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் மதுரை நகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது…

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் பேசினோம். விஷயத்தைக் கேட்டுக்கொண்ட அவர், "எதிர் தரப்பினரால் எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை என்பதால் இது மாதிரியான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் சொல்லாததை எல்லாம் சமூக வலைத்தளத்தில் எழுதி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இது போன்று நிறைய வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கிறது. எதிர்க்கட்சியினர் இதையே வேலையாக வைத்து செய்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மக்களுடன் பழகி வருகிறேன். மதுரை மக்களுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்" என்றார்.


படம்: சு.வெங்கடேன் வேட்புமனு தாக்கல் செய்யும் புகைப்படம்.
Courtesy: CPIM Tamilnadu

பிங் சந்துருவின் பின்னணி பற்றி அவருடைய முகநூல் பக்கத்தில் தேடினோம். அவர், எந்த அமைப்பையும் சார்ந்தவராக தன்னை வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவர் தொடர்ச்சியாக, பா.ஜ.க ஆதரவு மற்றும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளது தெரிந்தது. அவருடைய பதிவுகள் பெரும்பாலும் வதந்தி வகையிலேயே இருந்தன.

நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த உண்மை விவரம்,

1. விஷமத்தனமான இந்த செய்தி எந்த செய்தி நிறுவனத்திலும் வெளியாகவில்லை
2. பதிவிட்டவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3. தான் எங்கேயும் அவ்வாறு பேசவில்லை, இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்று சு.வெங்கடேசன் நம்மிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
4. பதிவிட்டவரின் பின்னணி சந்தேகத்தை அளிக்கும் வகையில் உள்ளது.

மேற்கண்ட இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த பதிவு வெறும் விஷமத்தனமான வதந்திதான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முடிவு

உரிய ஆதாரங்களின்படி, சு.வெங்கடேசன் அப்படிப் பேசவில்லை; விஷமிகள் வேண்டுமென்றே இப்படி பதிவுகளைப் பரப்பி வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:சித்திரை திருவிழாவை தள்ளிவைக்க சொன்னாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்?

Fact Check By: Praveen Kumar

Result: False