ஃபேஸ்புக்கில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு நீரவ் மோடி கொடுத்த ரூ.98 கோடி மதிப்பிலான செக்‘’, என்றும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நண்பர் நீரவ் மோடி என்றும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதைப் பார்த்ததும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சித்தரிக்கப்பட்ட தேர்தல் பிரசாரம் போல தோன்றியது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம்.

வதந்தியின் விவரம்:

இந்த காசோலைக்கு சொந்தகாரர் ர.ராகுலின் நண்பர் நீராவ் மோடி

Archived Link

இந்த பதிவை பார்த்தாலே, போட்டோஷாப் செய்தது என்று எளிதாக தெரிகிறது. ஆனால், இதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி யோசிக்காமல் பலரும் இதனை லைக், ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மும்பையை சேர்ந்தவர் தொழிலதிபர் நிரவ் மோடி. நகை மற்றும் வைர வர்த்தகரான இவர், இந்திய வங்கிகளில் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் வாங்கிவிட்டு, லண்டனுக்கு தப்பியோடிவிட்டார். இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவிலும் இவர் மேல் நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபற்றி மேலும் தகவல் அறிய இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

இவ்வாறு தப்பியோடிய நிரவ் மோடிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ததாக, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பான செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நிரவ் மோடி தற்போது லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதார செய்தி விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில்தான், நிரவ் மோடி பற்றிய காசோலை செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க இது நாடாளுமன்ற தேர்தல் காலமாகும். இதனால், பொது வெளியில் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும், அவர்களின் கட்சித் தொண்டர்களும் காரசாரமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது தவிர, மோடி ஆதரவு, எதிர்ப்பு, ராகுல் காந்தி ஆதரவு, எதிர்ப்பு மனநிலை உள்ளவர்களும் இந்த அரசியல் கருத்து பகிர்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறார்கள். இப்படியான நபர்கள் பகிரும் கருத்துகள் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டவை, போலியானவையாகவே உள்ளன. இதன் அடிப்படையில்தான் மேற்கண்ட பதிவிலும் போட்டோஷாப் செய்து, ராகுல் காந்தி எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.

முதலில், இந்த காசோலையில் இடம்பெற்றுள்ளது, நிரவ் மோடியின் உண்மை கையெழுத்தா என்பது பற்றி அறிய கூகுளில் தேடினோம். அதில், இதுதொடர்பாக, ஏற்கனவே, சில இணையதளங்களில் விரிவான செய்தி வெளியிடப்பட்டதாக, தெரியவந்தது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

அந்த இணைப்புகளை திறந்து, படித்து பார்த்தபோது, நிரவ் மோடி பற்றி பகிரப்படும் காசோலை புகைப்படம் போலியானது என்றும், அதில் உண்மை இல்லை என்றும் ஆதாரத்துடன் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தன. இதுபற்றி ayupp இணையதளம் வெளியிட்ட செய்தியை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். அல்லது smhoaxlayer வெளியிட்ட செய்தியை படிக்க விரும்பினால் இங்கே பார்க்கலாம்.

இந்த இரண்டு இணையதங்களின் கட்டுரையை படித்தபோது, நமக்கும் சில உண்மைகள் தெரியவந்தன. அதாவது, மேற்கண்ட பதிவில் இடம்பெற்றுள்ள காசோலை புகைப்படம் தமிழ்மொழியில் மட்டுமின்றி, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆதார பதிவுகள் மற்றும் பதிவு செய்த இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

https://twitter.com/nrajshetty/status/968162948878237696

Archive Link 1
Archive Link 2
Archive Link 3

மேலும், இந்த போலி காசோலையை பகிரும் பலரும் பாஜக ஆதரவாளர்களாக உள்ளனர். நாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பதிவை பகிர்ந்த தமிழரும் ஒரு பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்ட நபர்தான். அவரது புரொஃபைல் சென்று பார்த்தால், மோடி ஆதரவு மற்றும் காங்கிரஸ், திமுக எதிர்ப்பு பதிவுகள் நிறைய உள்ளதைக் காணலாம். அவரது புரொஃபைல் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, எப்படி பாஜக.,வினர் இந்த போலி செக் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்களோ, அதேபோல, பாஜக.,வுக்கு எதிராக, காங்கிரஸ் ஆதரவாளர்களும் ஒரு செக் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். அதில், பாஜக.,வுக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.35 கோடி அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆதார பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archive Link

இதுதவிர, மேற்கண்ட காசோலை புகைப்படம் பற்றிய ஆய்வில் மேலும் உண்மைகள் தெரியவந்துள்ளன. அதாவது,
1)இவர்கள் குறிப்பிடும் காசோலையில் வங்கியின் முகவரி நார்த் லக்கிம்பூர், அசாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த நிரவ் மோடிக்கு, ஆயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து அசாம் மாநிலத்தில் வங்கி கணக்கு தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
2) நிரவ் மோடி கையெழுத்திடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இடத்தில் காசோலையின் உரிமையாளர் பெயர் அழிக்கப்பட்டுள்ளதை கண்கூடாகக் காணலாம்.
3) இந்த காசோலையின் தேதி 25.09.2011 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஒரு காசோலையை கையில் வைத்திருந்தால் அது செல்லாத ஒன்றுதான்.
4) வங்கியில் இருந்து ஒரே நேரத்தில் ரூ.98 கோடி பணம் எடுக்கவே முடியாது.
5) காசோலையில் Ninety என்பதற்குப் பதிலாக, Ninenty என்று எழுதியுள்ளனர். இப்படி தவறாக எழுதப்படும் காசோலையை வங்கியில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
6) சாமர்த்தியமாக, வங்கிக் கடனை ஏமாற்றிவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடி நிரவ் மோடி, இப்படி எளிதில் சிக்கும் வகையிலான தவறுகளை ஒரு காசோலையில் செய்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆதார புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் இது ஒரு சித்தரிக்கப்பட்ட காசோலை என்று உறுதியாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நிரவ் மோடி, இத்தகைய காசோலை எதையும் ராகுல் காந்திக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ தரவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:காங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி?

Fact Check By: Parthiban S

Result: False