தாடி வளர்த்த ராகுல் காந்தி என்று கேலியாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

இந்திய ஒற்றுமை பயணத்தில் நடந்தால் தாடிதான் வளருமே தவிர கட்சி வளராது என்று ராகுல் காந்தி தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மிகவும் அதிகமாகத் தாடி, மீசை மற்றும் தலைமுடி வளர்ந்த நிலையில் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நடந்து நடந்து தாடி தான் வளருமே தவிர கட்சியோ???ஓட்டோ வளர போவதில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை அரசியல் சித்தன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 அக்டோபர் 20ம் தேதி வெளியிட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

மற்றொரு பதிவில், “மேற்கு வங்க தேர்தலுக்காக தாடி வளத்தினான் கேடி..! இந்திய மக்களின் ஒற்றுமைக்காக தாடி வளத்தி நடக்கிறான் எங்கள் ராகுல் காந்தி..!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Manoj Vin என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 20ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இவர்களைப் போல ராகுல் காந்தியை புகழ்ந்தும், விமர்சித்தும் பலரும் இந்த படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பற்றித் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, அவர் தாடி, மீசை அதிக அளவில் வளர்ந்து, தளர்வுற்றவர் போல இருக்கும் புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த படத்தையே தங்களுக்கு சாதகமான வகையில் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் உள்ளிட்ட பல பக்கங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் இருப்பது போன்று அல்லாமல் ராகுல் காந்தி தாடி, மீசை, தலைமுறை சீராக இருந்தது.

இதன் மூலம் ராகுல் காந்தியின் இயல்பான படத்தை எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்திய ஒற்றுமை பயணத்தில் நடந்து ராகுல் காந்தி சோர்ந்து போனது போன்று பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தாடி வளர்த்த ராகுல் காந்தி என்று கேலியாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered