
பாலிவுட் திரைப்படங்களில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியை மிகைப்படுத்திக் காட்டுவது போலவும், உண்மையில் உடல் வலிமை குறைந்தவராக அவர் இருந்தார் என்றும் ஒரு புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சத்ரபதி சிவாஜியின் உண்மை படம் என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாக அதில் வேறு சில புகைப்படங்களையும் அதில் வைத்திருந்தனர். இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி உண்மை புகைப்படம் என்று அர்த்தம் வரும் வகையில் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். 1800ம் ஆண்டுகளின் நடுவில் தான் புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிவாஜியின் காலமோ 1630 முதல் 1680 வரையில்தான். அப்படி இருக்க அவரது உண்மையான புகைப்படம் எப்படி எடுத்திருக்க முடியும் என்ற கேள்வியுடன் ஆய்வை தொடங்கினோம்.
முதலில் இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது படத்தில் இருப்பது ஜோத்பூர் மகாராஜா என்பது தெரியவந்தது. இந்த புகைப்படத்தை gettyimages என்ற புகைப்படங்களை விற்பனை செய்யும் இணையதளம் விற்பனைக்காக வைத்திருந்ததைக் காண முடிந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து, மெலிந்த தேகம் கொண்டவர் போல மாற்றி சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.
உண்மைப் பதிவைக் காண: gettyimages.co.uk I Archive
ஜோத்பூர் மகாராஜாவின் புகைப்படம் 1875-76ம் ஆண்டில் இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் இந்திய சுற்றுப்பயணத்தின் போது எடுக்கப்பட்டது என்றும், இவரது பெயர் ஜஸ்வந்த் சிங் II என்றும் சில தகவல் நமக்கு கிடைத்தன.
அடுத்ததாக சத்ரபதி சிவாஜியின் உண்மையான ஓவியம் என்று ஏதேனும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அப்படி ஒரு ஓவியம் இருப்பதாக கூகுள் லென்ஸில் நமக்கு தகவல் கிடைத்தது. 1680 முதல் 1687க்கு இடைப்பட்ட காலத்தில் அந்த ஓவியம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஓவியம் எதில் செய்யப்பட்டது, அதன் அளவு என்ன, இந்த ஓவியம் எப்போது எங்கு வாங்கப்பட்டது என்று எல்லாம் விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில் சத்ரபதி சிவாஜியின் உண்மையான தோற்றம் என்று பரவும் புகைப்படமானது தேகம் மெலிதாக காட்டும் வகையில் எடிட் செய்யப்பட்ட ஜோத்பூர் மகாராஜாவின் புகைப்படம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மராட்டிய மன்னர் சிவாஜியின் உண்மைத் தோற்றம் என்று எடிட் செய்யப்பட்ட ஜோத்பூர் மன்னரின் புகைப்படத்தை தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:சத்ரபதி சிவாஜியின் உண்மையான தோற்றம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
