ரமண மகரிஷியுடன் காஞ்சி மஹா பெரியவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

காஞ்சி மகா பெரியவா எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவண்ணாமலை ரமண மகரிஷியை சந்தித்தபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இரண்டு துறவிகள் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மிக அரிதான புகைப்படம். காஞ்சி மகா பெரியவா திருவண்ணாமலை ரமண மகரிஷி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரமண மகரிஷி 1879ம் ஆண்டு பிறந்து, 1950ம் ஆண்டு காலமானார். ஆனால், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 1894ம் ஆண்டு பிறந்தவர். ரமண மகரிஷி இறக்கும் போது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிக்கு 54 வயதுதான் இருந்திருக்கும். என்றாலும், மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள இரண்டு பேரும் முதுமையான தோற்றத்தில் உள்ளனர். ரமண மகரிஷியை சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சந்தித்தாரா என்று அறிய ஆய்வு செய்தோம்.

கூகுளில் ரமண மகரிஷி – காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர ஸ்வாமிகள் சந்திப்பு என்று டைப் செய்து தேடினோம். அவர்கள் இருவரும் சந்தித்ததாக எந்த ஒரு பதிவும் நமக்குக் கிடைக்கவில்லை. ரமண மகரிஷியை சந்தித்த காஞ்சி சங்கராச்சாரியாரின் பக்தரின் அனுபவங்கள் பற்றிய பதிவுகள் மட்டுமே கிடைத்தது.

காஞ்சி காமகோடி பீடத்தின் இணையதளத்திலேயே இருவருடனான தொடர்பு பற்றிய கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் 1929, 1944ம் ஆண்டுகளில் திருவண்ணாமலைக்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார் என்றும், இது தவிர கார்த்திகை தீபம் ஏற்றும் போது இரண்டு முறை வந்தார் என்றும், 1947ம் ஆண்டு அக்டோபரில் திருவண்ணாமலைக்கு பக்கத்தில் வந்து சென்றார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் எப்போதும் ரமண மகரிஷியை சந்திக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: kamakoti.org I Archive I thiruppugazh.org I Archive

இந்த புகைப்படம் தொடர்பான விவரங்களை அறிய காஞ்சி சங்கர மட நிர்வாகிகளை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். பக்தி தொடர்பான ஊடகங்களில் பணியாற்றி, காஞ்சி சங்கர மடத்துடன் தொடர்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் மூலம் காஞ்சி சங்கரமட நிர்வாகி ஒருவருக்கு இந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்-ல் அனுப்பினோம். அதை பார்த்த அவர்கள் படத்தில் உள்ள ஒருவர் மகா பெரியவர். ஆனால் அருகில் உள்ளவர் யார் என்று தெரியவில்லை, அவர் ரமண மகரிஷி போலவும் இல்லை. மகா பெரியவா ரமண மகரிஷியை சந்தித்ததாக எந்த தகவலும் இல்லை” என்று உறுதி செய்தனர்.

உண்மைப் பதிவைக் காண: mahaperiyavaa.blog I Archive I mahaperiyavaa.blog I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 1962ம் ஆண்டில் இளையாத்தங்குடிக்கு சென்ற போது அனந்தானந்த ஸ்வாமிகளுடன் மஹா பொியவா என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை காஞ்சி பெரிய சங்கராச்சாரியார் தொடர்பான பிளாக் (Blog)-ல் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ரமண மகரிஷியுடன் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பதும் தெளிவாகிறது.

முடிவு:

1962ம் ஆண்டு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளையாந்தங்குடியில் அனந்தானந்த ஸ்வாமிகள் என்பவரை சந்தித்தபோது எடுத்த படத்தை, ரமண மகரிஷியுடன் இருப்பதாக தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ரமண மகரிஷியுடன் காஞ்சி மஹா பெரியவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False