
2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 200 தொகுதிகளுக்கு மேல் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும் என்று தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “2021 தேர்தலில் அதிமுக 200 தொகுதிக்கு மேல் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டை மூர்த்தி பொன்னமராவதி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 அக்டோபர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற உற்சாகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர். நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று தி.மு.க கூறி வருகிறது. எங்கள் துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பா.ஜ.க கூறி வருகிறது. முடிவு தமிழக மக்கள் கையில் உள்ளது.
இந்த நிலையில், 200 தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வி அடையும் என்று துணை சபாநாயகராக உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

பொள்ளாச்சி ஜெயராமன் சமீபத்தில் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா, குறிப்பாக அ.தி.மு.க-வின் வெற்றி தோல்வி பற்றி ஏதும் கூறியுள்ளாரா என்று பார்த்தோம். அப்போது, “2021 தேர்தலில் அ.தி.மு.க 65 சதவிகித வாக்குகள் பெற்று மீண்டும் அமோக வெற்றி பெறும்” என்று பேசியது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: dinakaran.com I Archive
இந்த செய்தியைத் திரித்து வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது. நியூஸ் கார்டை பார்க்கும் போது அசல் போலத் தெரியவில்லை. வழக்கமாக தந்தி தொலைக்காட்சி பயன்படுத்தும் ஃபாண்ட், டிசைன் இதில் இல்லை. அக்டோபர் 17ம் தேதி என்று குறிப்பிட்டிருந்ததால் அந்த தேதியில் ஏதும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம்.
அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ளது போன்ற நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. அதில், “2021 தேர்தலில் அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இது தொடர்பாக தந்தி டிவி இணையப் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது. இது போலியானது. இது தொடர்பாக விளக்க நியூஸ் கார்டை வெளியிட உள்ளோம்” என்றார். மேலும், நியூஸ் கார்டு வெளியானதும் அதன் லிங்கை நமக்கு கொடுத்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 200 தொகுதி தொகுதிக்கு மேல் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் பரப்பியதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அதிமுக தோல்வி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Altered
