
சத்ய சாய்பாபாவிடம் மண்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆசீர்வாதம் வாங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
மறைந்த சத்ய சாய்பாபாவிடம் ஒருவர் ஆசி பெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சனாதனத்திடம் முட்டி போட்டு மன்டியிட்டு ஆசிர்வாதம் வாங்கிய ஆ.ராசா … எச்சனாதனம் பற்றி பேச உணக்கு என்ன அருகதை இருக்கு ….?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை ரவி சங்கர் அம்பலகாரர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 8ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சத்ய சாய்பாபாவிடம் தி.மு.க-வின் ஆ.ராசா ஆசி பெற்றார் என்றும் இப்படி மண்டியிட்டு ஆசீர்வாதம் பெற்றுவிட்டு சனாதனத்தைப் பற்றி எப்படி பேசலாம் என்று பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். படத்தில் உள்ளவரை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஆ.ராசா போல தெரிகிறது. சற்று உற்று நோக்கினால் படத்தில் இருப்பவர் ஆ.ராசா இல்லை, வேறு யாரோ என்பது தெரிகிறது. எனவே, இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆ.ராசா மண்டியிட்டார் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் இதை பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது இந்த புகைப்படத்தை சத்ய சாய்பாபாவின் இணையதளத்தில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. 2020ம் ஆண்டில் இந்த படத்துடன் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தது. ஆதித்ய நிட்டாலா (Aditya Nittala) என்பவர் இந்த கட்டுரையை எழுதியிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: vidyullekha.in
சத்ய சாய்பாபாவுடன் தன்னுடைய அனுபவம் பற்றி அவர் அந்த கட்டுரையில் எழுதியிருந்தார். அதில் சத்ய சாய்பாபாவை சந்தித்த படத்தை அவர் பகிர்ந்திருப்பது தெரிந்தது. ஆனால், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி அதில் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து தேடிய போது 2020ம் ஆண்டில் சத்ய சாய்பாபாவின் 95வது பிறந்தநாளையொட்டி பலரும் சத்ய சாய்பாபாவுடன் தங்களுக்கான அனுபவம் பற்றி கட்டுரைகளை எழுதியிருப்பதையும் அதை தொகுத்து வெளியிட்டிருப்பதும் தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: vidyullekha.in I Archive
சத்ய சாய்பாபாவை ஆ.ராசா சந்தித்துள்ளாரா, அவர் காலில் விழுந்து ஆசி பெற்றாரா… அது தொடர்பாக செய்தி ஏதும் வௌியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியோ புகைப்படமோ கிடைக்கவில்லை. நம்முடைய ஆய்வில் புகைப்படத்தில் இருப்பவர் ஆ.ராசா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
யாரோ ஒருவர் சத்ய சாய்பாபாவிடம் ஆசி பெற்ற படத்தை எடுத்து, ஆ.ராசா ஆசி பெற்றார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
