
அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் பசியால் மரணமடைந்த சாது. மத்தபடி அடிச்சி கொன்னா மட்டும்தான் குற்றம். பசில செத்தா பிரச்சனை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Anas Bin Asraf என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்கும்போது இறந்து கிடப்பவர் உடல் மெலிந்து காணப்படுவதால் பசியால் இறந்தார் என்று கூறுவது நம்பும்படியாக இருப்பதால் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த படம் மற்றும் பகிரப்படும் தகவல் உண்மையா என ஆய்வு மேற்கொண்டோம்.
கூகுளில் அயோத்தியில் உணவின்றி உயிரிழந்த சாது என்று டைப் செய்து தேடியபோது சில செய்திகள் கிடைத்தன. அதனுடன் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவு வெளியிட்ட ஃபேக்ட் செக் கட்டுரையும் கிடைத்தது. அதனுடன் நடிகை நக்மா உள்ளிட்ட பலர் வெளியிட்ட ட்வீட்களும் கிடைத்தன. ஆய்வுக் கட்டுரையை ஒதுக்கிவிட்டு, சாது மரணம் தொடர்பான செய்தியான செய்தி, ட்வீட் பதிவுகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்த்தோம்.
நக்மா வெளியிட்டிருந்த ட்வீட்டில், “பசி மக்களை கொள்கிறது. உ.பி அயோத்தியில் சாது பசி காரணமாக உயிரிழந்துள்ளார் (செய்தி லிங்க் கொடுத்துள்ளார்). பசி காரணமாக பல மக்களும் சாதுவும் உயிரிழந்திருப்பது சோகத்தை அளிக்கிறது” என்று கூறியிருந்தார்.
நக்மா கொடுத்திருந்த லிங்கை திறந்து பார்த்தபோது, இந்தி செய்தி ஒன்று இருந்தது. மொழியாக்கம் செய்து பார்த்தபோது “சாது உயிரிழக்க பசியா அல்லது நோய் காரணமா?” என்று கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டிருந்தனர். செய்தியின் உள்ளே, சாது பசி காரணமாக உயிரிழந்தார்.
சாது இறந்திருக்கும் தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை எடுத்து சராயு நதியில் வீசி எறிந்தனர் என்று சிலர் கூறுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ அந்த சாமியாரை நாங்கள் பராமரித்து வந்தோம். ஒரு மாதமாக அவர் உடல் நலக் குறைவால் அவதிபட்டு வந்தார். முந்தைய நாள் இரவு பெய்த மழையில் அவர் உயிரிழந்திருப்பார் என்று நினைக்கிறோம்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறுதிச் சடங்கை நிறைவேற்றினார்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக போலீசாரிடம் சாதுக்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான தகவல் கொடுக்கப்பட்டதாக புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தனர்.
ஆனால் அந்த கடிதம் சாதுக்கள் எழுதியது போல் இல்லை. சட்ட சிக்கல் வராமல் இருக்க மிகத் தெளிவாக சட்டப்பூர்வமாக எழுதப்பட்ட கடிதம் போல் இருப்பதாகவும் அந்த கட்டுரையாளர் சந்தேகம் எழுப்பியிருந்தார். ட்விட்டரில் இந்த கடிதங்கள் நமக்கு கிடைத்தன.
அடுத்ததாக அயோத்தி போலீஸ் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவை பார்த்தோம். அதில், “சாது மரணம் தொடர்பாக தவறான தகவலை சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர். அவர் இயற்கையான முறையில் மரணம் அடைந்தார். வதந்தி பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
தினக் பாஸ்கர் என்ற ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், “அயோத்தி எஸ்எஸ்பி ஆஷிஷ் திவாரி இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகங்களில் சாது பசி காரணமாக உயிரிழந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று கூறிய அவர், 80 வயதான சாது கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இறந்த சாதுவுக்கு மற்றொரு சாது சமாஜ் சார்பில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அவர்கள் அந்த இறந்த சாதுவுக்கு உடற்கூறு ஆய்வு நடத்த அனுமதிக்கவில்லை. அவர் இயற்கையான முறையில் இறந்ததால் உடற்கூறு ஆய்வு தேவையில்லை என்று கடிதம் எழுதிக் கொடுத்தனர்” என கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவு வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம். அதில், அவர்கள் அயோத்தி எஸ்எஸ்பி ஆஷிஷ் திவாரியை தொடர்புகொண்டு பேசியதாகவும், “சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாது சமாஜ் புகார் அளித்துள்ளது. அங்குள்ள சாதுக்களுக்கு போதுமான உணவும் தண்ணீரும் உள்ளதாக சாது சமாஜ் தெரிவித்துள்ளது. இறந்த விஷ்னு தாஸ் என்ற சாதுவுக்கு 80 வயதாகிறது. அவர் இயற்கையான முறையில் இறந்ததாக சாதுக்கள் எழுதிக் கொடுத்துள்ளனர்” என்று கூறியதாக சாதுக்கள் எழுதிக் கொடுத்த கடிதத்தை வெளியிட்டிருந்தனர்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
சாதுவின் மரணம் தொடர்பாக நடிகை நக்மா உள்ளிட்டவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் செய்தி கிடைத்துள்ளது.
சாது இயற்கையான முறையில் இறந்ததாக சாது சமாஜ் தரப்பில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள சாதுக்களுக்கு போதுமான உணவும் தண்ணீரும் உள்ளது என்று சாது சமாஜ் கூறியுள்ளது.
இறந்த சாதுவுக்கு வயது 80 ஆவதாலும், அவர் இயற்கையான முறையில் இறந்தார் என்று அவருடன் இருந்தவர்கள் கூறியதாலும் உடற்கூறு ஆய்வு நடத்தவில்லை என்று மாவட்ட எஸ்.எஸ்.பி விளக்கம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
சாதுவின் மரணம் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அயோத்தி போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பசி கொடுமையால் சாது இறந்தார் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அயோத்தியில் பசி காரணமாக சாது மரணம் அடைந்தாரா?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
