போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கை அறை என்று பரவும் படம் உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படும் போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கை அறை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

போப் பிரான்சிஸ் படுக்கை அறைக்குள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “140 கோடி கத்தோலிக்கரை வழிநடத்தும் திருத்தந்தையின் அறை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Sinnaiya Alexander என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படுபவர் போப் பிரான்சிஸ். அவர் போப் ஆகப் பொறுப்பேற்றதிலிருந்து எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். வாட்டிக்கன் நகரில் போப் தங்குவதற்காக உள்ள சொகுசு மாளிகையை தவிர்த்து விருந்தினர்கள் தங்குவதற்காக உள்ள விடுதியில் இரண்டு அறைகளில் அவர் வசித்து வருவதாக அவர் பொறுப்பேற்ற புதிதில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அவரது எளிமையான அறை என்பது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது வாட்டிகன் நகரில் உள்ள அவரது அறையின் புகைப்படமா என்று அறிய ஆய்வு செய்து பார்த்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதராகக் கருதப்படும் பியோ என்பவரின் வசிப்பிடத்துக்கு போப் வந்த போது எடுத்த புகைப்படம் என்று குறிப்பிட்டு இந்த படம் 2018ம் ஆண்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: aleteia.org I Archive

கத்தோலிக்க கிறிஸ்தவம் பற்றி செய்தியை மட்டுமே வெளியிடும்  EWTN News Nightly என்ற ஊடகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு மே 17ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில் பியோவின் படுக்கை அறையில் போப் பிரான்சிஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

மேலும், தொடர்ந்து தேடிய போது புனித பியோ பற்றிய கட்டுரைகள் சிலவற்றிலும் கூட இதே அறையின் புகைப்படம் பகிரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படத்தில் காணப்படும் அறை, போப் பிரான்சிஸின் படுக்கை அறை இல்லை என்பது உறுதியானது.

முடிவு:

போப் பிரான்சிஸின் படுக்கை அறை என்று பகிரப்படும் புகைப்படம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் புனிதர் என்று அழைக்கும் புனித பியோவின் அறைக்கு போப் பிரான்சிஸ் சென்ற போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:போப் பிரான்சிஸின் எளிமையான படுக்கை அறை என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False