
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04 என்று தினகரன் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I dinakaran.com I Archive 2
“நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04” என்று தலைப்பிடப்பட்ட செய்தியின் இணைப்பு ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. dinakaran daily newspaper என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி இணைப்பு 2021 பிப்ரவரி 23 அன்று பதிவிடப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாகாலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04 என்று சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தனர். பெட்ரோலின் உண்மை மதிப்பு மற்றும் மத்திய அரசு வரியே முறையே ரூ.30க்கு மேல் இருக்கும்போது நாகாலாந்தில் எப்படி ரூ.16க்கு விற்பனை செய்யப்படும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பலரும் நாகாலாந்தில் 16 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே, தினகரன் நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான செய்தி உண்மையா என்று ஆய்வு செய்தோம். அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து தினகரன் நாளிதழ் இணையதள பக்கத்துக்குச் சென்று செய்தியை படித்துப் பார்த்தோம்.
“நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04” என்று தலைப்பிட்டிருந்தனர். செய்தியின் உள்ளே பார்த்தபோது, “நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மாநில அரசு குறைத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18.26 லிருந்து ரூ.16.04 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான வரி 25% முதல் 26.80% குறைக்கப்பட்டுள்ளதால் விலையும் குறைந்துள்ளது” என்று இருந்தது. அதாவது, நாகாலாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 18.26 ஆக இருந்தது போலவும் தற்போது 16.04 ரூபாயாக குறைந்து விட்டது போலவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், நாகாலாந்தில் பெட்ரோல் விலை என்ன என்று பார்த்தோம். என்.டி.டி.வி வெளியிட்டிருந்த செய்தியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.22 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் 57 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 29.8 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக அதாவது, ஒரு லிட்டருக்கு ரூ.18.26 ஆக உள்ள வரி ரூ.16.04 ஆகக் குறைக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தனர். தமிழில் இது தொடர்பாக தினத்தந்தி, தமிழ் இந்து என பல ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I dailythanthi.com I Archive 2 I hindutamil.inI Archive 3
தினகரன் நாகலாந்து பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. தினகரன் வெளியிட்ட செய்தியை உண்மை என்று நம்பி மற்றவர்கள் பகிர்ந்து வருவதும் தெரிகிறது.
நாகாலாந்தில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ.16.04 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 16.04 ஆக குறைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாகாலாந்தில் பெட்ரோல் ரூ.16.04க்கு விற்பனை செய்யப்படுவதாக பகிரப்படும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாகாலாந்தில் பெட்ரோல் மீதான மாநில வரி ரூ.16.04 ஆக குறைக்கப்பட்டதை பெட்ரோல் ரூ16.04க்கு விற்பனை செய்யப்படுவது போல தவறாக செய்தி வெளியிட்டுள்ளதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நாகாலாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16-க்கு விற்பனையா?- தினகரன் செய்தியால் குழப்பம்
Fact Check By: Chendur PandianResult: False
