FACT CHECK: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் காரில் இருந்த சைரனை அகற்றினாரா விஜய் ரூபானி?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த உடனேயே, தன் காரில் இருந்த சைரனை அகற்றினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தன்னுடைய காரில் இருந்து சைரனை அகற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த விஜய் ரூபானி ஜி தனது காரில் இருந்த சிவப்பு சைரனை அகற்றிய போது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Sathish Thangasaravanan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 செப்டம்பர் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி திடீரென்று தன்னுடைய பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பதவியில் இருந்து விலகிய அவர், தனக்கான அரசு மரியாதைகளை உடனடியாக விலக்கிவிட்டது போன்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, கூகுள் சர்ச் இன்ஜினில் “காரில் இருந்து சைரனை அகற்றிய விஜய் ரூபானி” என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். 

அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி உள்ளிட்ட பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. ஆனால் அவை எதுவும் 2021ல் பதிவேற்றம் செய்யப்பட்டது இல்லை. 2017ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான செய்திகளைத் தேடி எடுத்துப் பார்த்தோம். அப்போது, 2017ம் ஆண்டு அவசர கால வாகனங்கள் தவிர்த்து மற்ற எல்லா மத்திய, மாநில அரசு வாகனங்களிலிருந்தும் சைரனை அகற்றுவது என்று மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தன்னுடைய காரில் இருந்து சைரனை அகற்றினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive

இந்த வீடியோவை விஜய் ரூபானியே கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியிட்டிருந்ததும் தெரிந்தது. அதில், “Lal Batti கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற மோடி அரசின் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மதித்து என்னுடைய வாகனத்தில் இருந்து சிவப்பு சைரன் விளக்கை அகற்றினேன். புதிய இந்தியாவில் எல்லோருமே விஐபி தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Archive

இதன் மூலம் 2017ம் ஆண்டு விஜய் ரூபானி தன்னுடைய காரில் இருந்து சைரனை அகற்றிய வீடியோவை எடுத்துவந்து, முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவுடன் விஜய் ரூபானி சைரனை அகற்றினார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விஜய் ரூபானி, தன்னுடைய காரில் இருந்து சைரனை கழற்றினார் என்று பரவும் வீடியோ 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் காரில் இருந்த சைரனை அகற்றினாரா விஜய் ரூபானி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •