வன்னிய சாதிவெறியர்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமைச்சர் பொன்முடி புகைப்படத்துடன் கூடி தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள். பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்! திருமண விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பேச்சு!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை மண்ணம்பூண்டி செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூன் 11ம் தேதி பதிவிட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பட்டியலின மக்களை வழிபட அனுமதி மறுத்ததாகக் கூறி சமீபத்தில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்களை வழிபட அனுமதிக்காத அந்த குறிப்பிட்ட சாதியினரை சுட்டுத் தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த அமைச்சர் பொன்முடி அவ்வாறு கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பதாலும் நியூஸ் கார்டின் டிசைன் சற்று வித்தியாசமாக இருந்ததாதலும் இது உண்மையா என்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

முதலில் நியூஸ் கார்டில் குறிப்பிட்டது போன்று ஜூன் 10ம் தேதி இப்படி ஒரு நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆனால், நமக்கு அமைச்சர் பொன்முடி படத்துடன் கூடிய எந்த ஒரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. இந்த நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2023 மே 19ம் தேதி இதே போன்று நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அதில், "கலை - அறிவியல் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு. கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர காலை அவகாசம் 22ம் தேதி வரை நீட்டிப்பு. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி" என்று இருந்தது. இதை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதை உறுதி செய்துகொள்ள, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

தொடர்ந்து தேடிய போது, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தி.மு.க எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார் என்று செய்தி கிடைத்தது. இவை எல்லாம் இந்த தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்பதை உறுதி செய்தன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் வன்னியர்களை சுட்டுத் தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று பொன்முடி கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False