ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது?
சீன தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தேசியக் கொடி போர்த்தப்பட்டது போன்ற வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி எடுத்துச் செல்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை திருத்துறைப்பூண்டி வளரும் நகரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 17ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு வருகிறது என்று வீடியோவை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் கொண்டுவரப்படுகிறது என்று குறிப்பிடவில்லை.
ஆனால், பொதுவாக ராணுவ வீரர் என்று குறிப்பிட்டுள்ளதாலும், சீன தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்கள் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையிலும் இது பழனியின் உடல் கொண்டுவரப்படுவதை குறிப்பிடுவது போல உள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவைப் பார்க்கும்போது அதில் கடைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பெயர்ப்பலகைகள் இருப்பதைக் காண முடிகிறது. மேலும் மலைப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது போல் உள்ளது (தமிழக வீரர் பழனி ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்).
இதனால், சமீபத்தில் காலமான இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆறுமுகம் தொண்டைமான் இறுதி ஊர்வலத்தின் வீடியோவை எடுத்து ராணுவ வீரர் உடல் ஊருக்கு வருகிறது என்று தவறாக பதிவிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
முதலில் தமிழக ராணுவ வீரர் உடல் கொண்டுவரப்படும் வீடியோவைத் தேடினோம். புதிய தலைமுறை, தந்தி டிவி என அனைத்து முன்னணி ஊடகங்களிலும் அது தொடர்பான செய்தி, முழு வீடியோவும் கிடைத்தது. அதைப் பார்க்கும்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தது.
எனவே ஆறுமுகம் தொண்டைமான் இறுதி ஊர்வலம் தொடர்பான வீடியோவைத் தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அசல் வீடியோவைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், ஆறுமுகம் தொண்டைமான் இறுதி ஊர்வலம் தொடர்பான பல வீடியோ, புகைப்படங்கள் நமக்கு கிடைத்தன. அதில் இருந்த அமைச்சரின் உடல் தாங்கிய வாகனமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள வாகனத்தின் தோற்றமும் ஒன்றாக இருந்தது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சி மலைப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. வீடியோவில் உள்ள கடைகளின் பெயர் பலகையில் சிங்களம் உள்ளது. ஆறுமுகம் தொண்டைமான் இறுதி ஊர்வல காட்சியும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியும் ஒத்துப்போகின்றன. இந்திய ராணுவ வீரர் உடல் அடக்கம் வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமான் இறுதி ஊர்வல காட்சியை எடுத்து தமிழக ராணுவ வீரர் உடல் கொண்டுவரப்படுகிறது என்று தவறான தகவலுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது?
Fact Check By: Chendur PandianResult: False