
‘’கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்த டாக்டர் ஹரிணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஆய்வு நடத்தினோம்.
உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று, இந்திய அளவில் பெரும் பாதிப்பையும், அதேசமயம் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வோரில் சிலர், குறிப்பிட்ட நாட்களில் திடீரென மரணமடைவது பெரும் பீதியையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசியால் மட்டுமே இந்த உயிரிழப்புகள் நிகழ்வதாக, சொல்லிவிட முடியாது என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் ஏற்கனவே உடல்கோளாறுகள் கொண்டிருப்பதே இதற்கு காரணம் என்றும் மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த இளம் மருத்துவர் ஹரி ஹரிணி, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒரு மாதத்தில், சுயநினைவை இழந்து, உயிரை விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த விவகாரத்தில் உண்மை என்னவெனில், அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாலேயே உயிரிழக்கவில்லை. கடந்த பிப்ரவரி 5, 20201 அன்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறார். சில நாட்கள் கழித்து, அவருக்கு லேசான காய்ச்சலும், உடல் வலியும் ஏற்பட்டிருக்கிறது.
இதனை சரிசெய்யும் நோக்கில், ஹரிணியின் கணவரும், மருத்துவருமான அசோக் விக்னேஷ், Diclofenac என்ற வலிநிவாரண மருந்தை ஊசி மூலமாகச் செலுத்தியுள்ளார். ஆனால், கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, ஹரிணி சுயநினைவை இழந்து, மார்ச் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தமிழ்நாடு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. போலீஸ் விசாரணை மற்றும் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

எனவே, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு ஒரு மாதம் கடந்த நிலையில்தான், காய்ச்சல், உடல் வலிக்காக, பெயின் கில்லர் ஊசி போட்ட நிலையில், இளம் மருத்துவர் ஹரி ஹரிணி உயிரிழந்திருக்கிறார். இதற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:டாக்டர் ஹரிணி கொரோனா தடுப்பூசி போட்டதால் உயிரிழந்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
