தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநருமான கிரண் பேடி படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "தமிழகத்தின் புது ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை GD Dinakar என்பவர் 2021 மே 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்த சூழலில் தி.மு.க-வினரை வெறுப்பேற்றுவதாக நினைத்துக்கொண்டு விவகாரமான பதிவுகளை சிலர் வெளியிட்டு வருகின்றனர். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் என்று எல்லாம் கூட பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், கிரண் பேடி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட இருக்கிறார் என்று கூறாமல் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டதாகவே சிலர் பதிவிட்டு வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

தமிழகத்தில் 2021 மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அந்த சூழலில் தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு எப்படி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக ஊடகம் ஒன்று கிரண் பேடியைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளது. அதற்கு அவர், "நான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவதாக வெளியாகிவரும் தகவல்கள் குறித்து தனக்கு இதுவரை எதுவும் தெரியாது" என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். கிரண் பேடிக்கே தெரியாத விஷயம் சமூக ஊடக பதிவருக்கு எப்படி தெரிந்தது என்றுதான் தெரியவில்லை.

அசல் பதிவைக் காண: abplive.com I Archive

தமிழக ஆளுநராக மத்திய அரசு தான் விரும்பிய நபரை நியமிக்கலாம். சொந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களையே அந்த மாநில ஆளுநராக நியமிப்பது இல்லை. அது வெறும் மரபுதான். தான் விரும்பினால் எந்த ஒரு நபரையும் மத்திய அரசால் நியமிக்க முடியும். அது கிரண் பேடியாகக் கூட இருக்கலாம். தற்போது அவர் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு எதுவும் வெளியாகி உள்ளதா என்று குடியரசு தலைவர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்தபோது, அப்படி எதுவும் வெளியாகவில்லை என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: presidentofindia.nic.in I Archive

தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு தமிழக ஆளுநர் மாற்றம் தொடர்பாக பரவும் செய்தியைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர், "இதெல்லாம் பிரதமர், உள்துறை அமைச்சர் மட்டத்தில் நடைபெறும் பேச்சு. சமூக ஊடகங்களில் சிலர் வீணாகப் பரப்பி வருகின்றனர். மேலும், தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்துக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் பதவிக்காலம் உள்ளது. எனவே, மாற்றுவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை. கிரண் பேடி நியமிக்கப்பட்டால் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு சமூக ஊடகங்களில் பரவும் வதந்தியைத் தடுத்து நிறுத்துங்கள்" என்றார்.

நம்முடைய ஆய்வில்,

தமிழக ஆளுநர் மாற்றப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கிரண் பேடி விளக்கம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False