இந்தியில் பேசிய சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைக்கு இந்தி தெரியாது என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் கூறி வரும் நிலையில், சுந்தர் பிச்சை இந்தியில் பேசிய வீடியோ ஒன்றை பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சுந்தர் பிச்சை தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதாக தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறிய காட்சி மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியில் பேசுவது போன்ற வீடியோவை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இருமொழிக் கல்வி படித்த கூகுல் தலைவர் சுந்தர் பிச்சைக்கு ஹிந்தி தெரியாது – பி.டி.ஆர்

இப்படி அழகா இந்தி பேசும் சுந்தர் பிச்சை படித்தது மூன்று மொழி கொள்கை, அந்த தனியார் பள்ளிக்கூடம் பெயர் “ஜவகர் வித்யாலயா CBSE பள்ளி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கூகுள் சிஇஓ இந்தி பேசுவது போன்ற வீடியோவை பதிவிட்டு, சுந்தர் பிச்சைக்கு இந்தி தெரியாது என்று கூறியது தவறு என்று சிலர் சமூக ஊடகங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சித்து வருகின்றனர். ஆனால், வீடியோவில் சுந்தர் பிச்சையின் வாய் அசைப்புக்கும், அவர் பேசியதற்கும் தொடர்பில்லை. பார்க்கும் போதே வீடியோ எடிட் செய்து, ஆடியோவை மட்டும் மாற்றியிருப்பது தெரிகிறது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

சுந்தர் பிச்சை பேசியதன் உண்மை வீடியோவை தேடினோம். அந்த வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது, பல வீடியோக்கள் கிடைத்தன. அவற்றைப் பார்த்த போது அதில் அவர் ஆங்கிலத்தில் பேசியது தெரிந்தது. அந்த வீடியோக்களில் இது 2016ம் ஆண்டு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சி மாநாட்டின் (Global Entrepreneurship Summit) போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது.

உண்மை வீடியோவை கண்டறிய தொடர்ந்து தேடினோம். Global Entrepreneurship Summit 2016 Silicon Valley (GES2016) என்ற யூடியூப் பக்கத்தில் நமக்கு அந்த வீடியோ கிடைத்தது. வீடியோவின் 54வது நிமிடத்தில் சுந்தர் பிச்சை மேடைக்கு வந்து பேசத் தொடங்குகிறார். 10 நிமிடங்கள் அவர் பேசுகிறார். வீடியோவின் ஒரு மணி நேரம் 5வது நிமிடத்தில் அவர் பேசி முடிக்கிறார். வீடியோ முழுவதையும் பார்த்தோம். அதில் அவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார், எங்கேயும் இந்தியில் அவர் பேசவில்லை.

2016ம் ஆண்டு நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் கூகுள் சிஇஓ பேசியதை யாரோ இந்தியில் டப்பிங் செய்துள்ளனர். அந்த வீடியோவை எடுத்து, கூகுள் சிஇஓ இந்தியில் பேசினார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சுந்தர் பிச்சை ஆங்கிலத்தில் பேசியதை இந்தியில் டப்பிங் செய்து அவர் இந்தியில்தான் பேசினார் என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:இந்தியில் பேசிய சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: Altered