‘டாஸ்மாக்’ பழக்கத்தால் இறந்த தந்தையின் உடலை தள்ளிச் சென்ற குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?
டாஸ்மாக் மது அருந்தியதால் மரணமடைந்த தந்தையின் உடலை மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளிச் செல்லும் சிறுவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஒருவரை சிறுவன் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், "டாஸ்மாக் மது அருந்தி தந்தை மரணம் குழந்தையின் கதி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "திராவிடமாடல்அரசை வாழ்த்தலாம் வாங்க" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை மழைகாரன் மழைகாரன் என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜூன் 16, 2023 அன்று வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது அருந்தியதால் இறந்த தந்தையை மருத்துவமனையில் தள்ளிக்கொண்டு செல்லும் சிறுவன் என்றும் திராவிட மாடல் அரசு என்று குறிப்பிட்டும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காலத்தில் பார்த்த நினைவு இருந்ததால் இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு இந்த வீடியோ செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பது தெரியவந்தது.
உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive
இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்தோம். அதில், "உத்தரப்பிரதேசத்தில் ஆறு வயது சிறுவன் தன்னுடைய தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையின் வார்டு பாய் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஈடிவி ஆந்திரபிரதேஷ் என்ற யூடியூப் பக்கத்தில் முழு வீடியோவும் வெளியாகி இருந்தது. அதில் ஸ்ட்ரெச்சரில் இருந்த நபருக்கு காலில் அடிபட்டிருப்பதைக் காண முடிந்தது. அவரை தள்ளிக்கொண்டு சென்ற பேரனுடன் அவர் ஒன்றாக இருக்கும் காட்சியையும் வெளியிட்டிருந்தனர்.
2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், இந்த வீடியோ 2020ம் ஆண்டிலேயே வெளியாகிவிட்டது. ஸ்ட்ரெச்சரில் சென்ற நபர், அந்த சிறுவனின் தாத்தா. அவர் மது அருந்தியதால் உயிரிழக்கவில்லை. டாஸ்மாக் 2021க்குப் பிறகு தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அது தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் டாஸ்மாக் மது அருந்தியதால் உயிரிழந்த தந்தையைத் தள்ளிக்கொண்டு சென்ற மகன் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2020ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது அருந்தியதால் உயிரிழந்த தந்தை என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:‘டாஸ்மாக்’ பழக்கத்தால் இறந்த தந்தையின் உடலை தள்ளிச் சென்ற குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False