பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் ஆதரிப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? டெல்லி நிர்வாக திருத்த மசோதாவால், அந்த மாநில மக்களுக்கு நல்லதே நடக்கும். அதனால்தான் வாக்களித்தோம். பாஜக கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிக்கும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.Jaya Kanagaraja என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை 2023 ஆகஸ்ட் 8ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி நிர்வாக திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் அ.தி.மு.க ஆதரவு அளித்திருந்தது. அமித்ஷாவுக்காக ஆதரவு அளிப்பதாக அதிமுக-வின் தம்பிதுரை பேசியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது மக்களாட்சியின் கறுப்பு நாள் என்றும் கொத்தடிமையாக தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதை இது காட்டுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில், ஆதரவு அளித்ததில் என்ன தவறு என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி இப்படி கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. மேலும், இந்த நியூஸ் கார்டும் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்கின்றன. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை நிர்வாகி ஒருவருக்கு அனுப்பிவைத்தோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது, இந்த தமிழ் ஃபாண்ட்டை நாங்கள் பயன்படுத்துவது இல்லை. போலியாக இதை உருவாக்கியுள்ளனர்" என்றார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஆதரவு அளித்ததில் என்ன தவறு என்று எடப்பாடி பழனிசாமி கேட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாவையும் ஆதரிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False