‘’கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு 367 பேருக்கு கொரோனா தொற்று,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’கர்நாடக மாநிலத்தில் மது கடையில் இருக்கும் விற்பனையாளர் மூலம் அங்கு வந்து மது வாங்கி சென்ற 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,’’ என எழுதப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மே 3, 2020க்குப் பின்னர் இந்தியா முழுவதும் பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால், நாட்டின் பல்வேறு இடங்களிலும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்கள் செய்த ‘வெறித்தனங்கள்’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதையொட்டியே, மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலும் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ள சூழலில், இந்த செய்தியை பலர் உண்மை என நம்பி குழப்பமடைய தொடங்கியுள்ளனர்.

உண்மையில், இது அதிகாரப்பூர்வமாக நியூஸ் 7 ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு கிடையாது. இதனை பார்க்கும்போதே, இது எடிட் செய்யப்பட்ட விசயம் தெளிவாக தெரிகிறது. எழுத்து நடை, ஃபாண்ட் உள்ளிட்டவை வித்தியாசமாக உள்ளது.

இப்படி ஏதேனும் செய்தி நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ளதா என அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (@News7 Tamil) சென்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் வெளியாகவில்லை.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நியூஸ்7 ஊடகத்தின் ஆன்லைன் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரித்தோம். அவர்கள், ‘’இது போலியான நியூஸ் கார்டு. இப்படி எதுவும் நாங்கள் வெளியிடவில்லை,’’ என மறுத்துவிட்டனர்.

இப்படி ஒரே நேரத்தில் மது வாங்கச் சென்றவர்களுக்கு கொரோனா தொற்று என்று கூறி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. அத்துடன், நியூஸ் 7 ஊடகம் பெயரில் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதால், அதனை அந்த ஊடகமே மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே, இது போலியாக தயாரிக்கப்பட்ட நியூஸ் கார்டுதான் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் என பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer

Result: False