FactCheck: ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா?

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News

‘’ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா,’’ என்று கூறி பகிரப்படும் பல்வேறு தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

இதில், ‘’ஜோ பைடனின் பூர்வீகம் ஒரு இந்திய பிராமண குடும்பம். அவர்கள் முதலில், கொங்கன் பகுதியில் இருந்து பிறகு, குஜராத்தின் சூரத் சென்று, அங்கிருந்து மும்பை, லண்டன் என இடம்பெயர்ந்தார்கள்,’’ என்று கூறி விரிவாக எழுதியுள்ளனர்.

இதேபோல, ஃபேஸ்புக், ட்விட்டர் என எங்கு பார்த்தாலும் முன்னணி ஊடகங்கள் தொடங்கி, சாமானிய வாசகர்கள் பலரும் ஜோ பைடன் முன்னோர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, செய்தி பகிர்வதைக் காண முடிகிறது. 

Archived Link

உண்மை அறிவோம்:
ஒரு சிலர் ஜோ பைடனின் முன்னோர், மும்பையை சேர்ந்தவர்கள் என்றும், சிலர் மதராஸ் பகுதியை சேர்ந்தவர் என்றும், இன்னும் சிலர் கொங்கன் பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறி வித விதமான தகவல்களை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எது உண்மை, எது பொய் என சரியாகத் தெரியாமல், சமூக வலைதள பயனாளர்களும் குழப்பமடைந்துள்ளனர். எனவே, இதில் ஆதாரப்பூர்வமான உண்மை என்ன என்பது பற்றி தெரிவிக்கவே, இந்த செய்திக்கட்டுரை வெளியிடுகிறோம். யாரையும் தவறு என்று நிரூபிப்பதற்காக அல்ல.

முதலில், ஜோ பைடன் இந்தியாவுடன் தொடர்பு கொண்டவர் எனக் கூறப்படும் தகவல் எப்படி தொடங்கியது என்று பார்க்கலாம்.

கடந்த 2013ம் ஆண்டில், மும்பை வந்திருந்தபோது, ஜோ பைடன் முதன் முதலாக, இந்த தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது, 1970களில் கடிதம் வாயிலாக, பைடன் என்ற பெயருடைய ஒருவரை அவர் சந்தித்திருக்கிறார். அந்த கடிதத்தில், ‘ஜோ பைடன் மற்றும் தனது முன்னோரும் ஒருவரே. அந்த முன்னோர் ஐரிஷ் இனத்தைச் சேர்ந்தவர். அவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு பணிபுரிந்தபோது, இந்தியாவில் வசித்தார். அவரது வழி வந்தவர்தான் ஜோ பைடன்,’ என்று அந்த நபர் எழுதியிருந்துள்ளார்.

எனினும், இந்த கடிதம் பற்றிய விசயத்தை ஜோ பைடன் பெரியதாக ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி செய்திருந்தால், அவரது முன்னோர் பற்றிய விவரம் தெரியவந்திருக்கும்.

இதுபற்றி ஜோ பைடன் பேசியுள்ள வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link 

இதே தகவலை சற்று பெரிதுபடுத்திச் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

TOI News Link Archived Link 
India Today News Link Archived Link 

ஜோ பிடன் கூற்றுப்படி, ‘அவரது முன்னோரில் ஒருவர் ஐரிஷ் இனத்தைச் சேர்ந்தவர். அவர், கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்தபோது இந்தியா வந்து, வசித்திருக்கிறார். ஆனால், அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. அப்படி ஒருவேளை எனது பூர்வீகம் இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்கும்பட்சத்தில், தான் இந்திய பிரதமர் பதவிக்கு போட்டியிடவும் தயார்,’ என்று தெரிவித்துள்ளார்.

Financial Express News Link

அதேசமயம், ஊடகங்களில் ஜோ பைடன் முன்னோர், கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்தபோது மும்பை, சென்னையில் வசித்திருக்கிறார். அங்கேயே இறந்தும் விட்டார் என்று கூறப்படுகிறது.

யதார்த்த உண்மை என்னவெனில், ‘’இந்தியாவில் ஜோ பைடன் என்ற பெயரில் யாரும் வசித்திருக்கவில்லை. ஐரிஷ் பின்னணியை சேர்ந்த கிறிஸ்டோபர் பைடன் என்பவர் கிழக்கிந்திய கம்பெனிக்காக, கடற்படை கேப்டனாக பணிபுரிந்திருக்கிறார். அவர் சென்னையில் வசித்து, அங்கேயே உயிரிழந்தும் இருக்கிறார். அவரது மனைவி, குழந்தைகள் பற்றிய சரியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த கிறிஸ்டோபர் பைடன், ஜோ பைடனின் முன்னோராக இருக்கலாம். அதுபற்றி சரியான ஆய்வு நடத்தினால், உண்மை தெரியவரும். அப்படி பார்த்தாலும் கிறிஸ்டோபரின் மனைவி இந்தியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஜோ பைடன் இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவது ஏற்புடையதல்ல,’’ என்றே இதுவரை கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.


   
முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் குழப்பக்கூடியதாக உள்ளதென்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FactCheck: ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Explainer